அவர் கூறுகையில்...
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பை என்னுடைய பதினாறு வயதில் தொடங்கினேன் என்னுடைய வளர்ச்சியோட சேர்ந்து அந்த நிகழ்ச்சியும் வளர்ந்தது. சொர்ணமால்யா என்றால் யார் என்று என்னை அறிமுகப்படுத்தியது இளமை புதுமை நிகழ்ச்சி தான். நான் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஏழு வருடங்கள் பண்ணினேன். நிறைய நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்தது. ஒரு விஷயம் நன்றாக நடக்கும் பொழுது சில நேரங்களில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்படி தான் அந்த நிகழ்ச்சியை ரொம்ப சந்தோஷமான சூழ்நிலையில் தான் முடித்தோம்.
சினிமாவுக்கும், சின்னத்திரைக்கும் இருந்த வித்தியாசங்கள் இப்போது போய்விட்டது. இன்றைய சூழ்நிலையில் சினிமாவிற்கு பலமாக இருப்பது சின்னத்திரை தான். சினிமாவோ சின்னத்திரையோ எனக்கு பிடித்த கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். சினிமாவில் "மொழி' படம் போல ஒரு நல்ல படத்தில் நடித்தால் பத்து சுமாரான படங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. அது போல் வராத பட்சத்தில் பத்து சுமாரான படங்கள் நடிக்க எனக்கு நேரமோ, விருப்பமோ இல்லை.
நெகடிவ் ரோல்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. நெகட்டீவா பண்ணினாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். இயல்பான நெகட்டீவ் ரோலாக இருந்தால் பரவாயில்லை. கத்தி எடுத்து குத்துவது மாதிரி எல்லாம் நான் செய்ய முடியாது. ஏன் என்றால் என்னிடம் நாட்டியம் கற்றுக்கொள்ள நிறைய பிள்ளைகள் வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நான் நிறைய சோஷியல் ஒர்க்கிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அது நிஜவாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதால் எனக்கு இஷ்டம் இல்லை. ரொம்ப பெரிய கம்பெனியில் இருந்து வில்லியாக நடிப்பதற்கு கேட்டார்கள். நல்ல கம்பெனி, நல்ல டைரக்டர், ரொம்ப நல்ல கதை இருந்தாலும் அவர்களோடு ஒர்க் பண்ண முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன்.
காஞ்சிபுரத்தில் நாட்டியப் பள்ளி
ஒரு நாளில் இருபத்திநாலு மணி நேரம் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு எத்தனையோ நிறைய நல்ல விஷயங்களைச் செய்யலாம். படிப்புக்காக டான்ஸை விட்டதில்லை, டான்ஸ்காக நடிப்பை விட்டதில்லை, ஒவ்வொன்றுக்கும் என் நேரத்தைப் பிரித்து செயல்படுகிறேன். இதுதான் என் பங்களிப்புன்னு சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன். நிறைய விஷயங்கள் செய்யணும்னு ஆர்வம் இருக்கு. அதற்கான முயற்சிகளில் ஒன்று தான் பிஎச்.டி. பட்டம் வாங்க வேண்டும் என்பது. என் மூலமாக சில விஷயங்களைக் கலை உலகத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. இதை தவிர சென்னையிலும், காஞ்சிபுரத்திலும் நாட்டிய பள்ளி வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன்.
தொடர் இயக்குவதற்கு நிறைய நேரம் வேண்டும். ஆனால் சினிமா டைரக்ஷன் பண்ணவேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஆனால் இப்போது அந்த எண்ணம் இல்லை. பிஎச்.டி.முடித்துவிட்டுதான் பண்ணவேண்டும் என்று வைராக்கியத்தில் இருக்கிறேன். டாக்டர் சொர்ணமால்யா ஆகிவிட்டுத்தான் டைரக்டர் சொர்ணமால்யா ஆவேன் என்றார்.
Post a Comment