விஜய் டிவியின் ‘மதுரை' தொடர் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ரம்யா அதே டீமுடன் ‘சரவணன் மீனாட்சி' தொடரிலும் அமைதியான பெண்ணாய் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியின் ‘முத்தாரம்' தொடரில் கணவனை கொலை செய்துவிட்டு காதலுடன் போகத்துடிக்கும் பெண்ணாக வில்லத்தனம் செய்கிறார். சீரியல் மட்டுமல்லாது சினிமாவிலும் களம் இறங்கியுள்ள ரம்யா தனது சின்னத்திரை பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தேனாம்பேட்டையிலுள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் பி.ஏ. படித்து விட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக விஜய் டி.வி.யின் "காதல் கதை' என்ற சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலின் இயக்குநர் எ.பி. ராஜேந்திரன் மூலம் சுறுசுறுப்பான கிராமத்து பெண் கேரக்டர் கிடைத்தது. குறும்புத்தனமான அந்த நடிப்பு எல்லோராலும் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அப்போது விருப்பமில்லை. "காதல் கதை' சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் நிறைய வாய்ப்புகள் வந்தன. "நிம்மதி', "கௌரவம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தேன். அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டது.
"மதுரை' சீரியலில் தண்டல் தாமரை என்ற சுறுசுறுப்பான கிராமத்து பெண்ணாக நடித்தேன். என்னவோ தெரியவில்லை எனக்கு அமைகின்ற கேரக்டர்கள் எல்லாமே கிராமத்தை மையமாக வைத்தே வருகின்றன. நகரத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு கிராமத்து கேரக்டர்களில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்கள் அமையப் பெற்றதால் சுலபமாக மாறிவிட்டது.
ஆண்பாவம் தொடரில் போல்டான கேரக்டர் செய்தேன். இப்பொழுது ஒளிபரப்பாகிவரும் முத்தாரம் தொடரில் மாடர்னான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அது ஓரளவிற்கு நெகடிவ் கலந்தது. சூரியன் எஃப்.எம். விளம்பரத்தில் நடித்தது மறக்க முடியாததாகும். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறேன்.
சீரியலின் வளர்ச்சி நாளுக்கு நாள் ஆரோக்கியமாக இருக்கிறது. சினிமாவில் இருந்து சீரியலுக்கு வருபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. சீரியலில் இருந்து சினிமாவுக்கு யாருமே ஆர்வமாக போவதில்லை.
சினிமாவைப் பொறுத்த வரை புடவை மட்டுமே கட்டி நடிக்கும் குடும்பப் பாங்கான கேரக்டர்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். ‘தடையறத்தாக்க' திரைப்படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரமாக அமைந்தது அதனால் ஈடுபாட்டுடன் நடித்தேன். மற்றபடி சினிமாவில் பெரிய அளவிலான ஆசைகள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் சீரியல் சூட்டிங்கிற்கு கிளம்பினார் ரம்யா.
Post a Comment