சுதந்திரமா இருக்கணும்: 'தங்கம்' தொடர் வர்ஷா

|

Thangam Serial Is My Favorite Varsha

தங்கம் தொடரில் வடிவும், இளவஞ்சியும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது. வடிவாக வரும் வர்ஷா ஹைதராபாத்தை சேர்ந்தவராம். இஸ்லாம் சமுதாயத்தை சேர்ந்த வர்ஷாவிற்கு பொட்டு வைத்துக்கொள்வது, பூவைப்பது என்றால் மிகவும் இஷ்டம் என்கிறார். தன்னுடைய சின்னத்திரை சீரியல் வாழ்க்கைப் பற்றி அவர் சொல்வதை படியுங்களேன்.

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஹைதராபாத்தில்தான். இங்கே சென்னையில் அத்தை, மாமாவோடு தங்கியிருக்கிறேன். சின்னவயதில் எங்கள் வீட்டில் டிவி எல்லாம் பார்க்க கூடாது. ஒரே ஒரு ரேடியோ தான் இருக்கும் அது கூட எங்க அப்பாதான் வைத்திருப்பார். சின்ன வயதில் இருந்தே எனக்கு டிவியில் வருபவர்கள் போட்டிருக்கும் நகைகள்,டிரஸ் எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கும். அதற்காகவே டி.வி. பார்ப்பேன். எனக்கு பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்து கொள்வது எல்லாம் ரொம்ப பிடிக்கும் அதற்காகவே மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன்.

காலேஜ் முடிச்சதும் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன். மாடலிங்கில் இருக்கும்போதுதான் "லட்சியம்' என்ற தொடரின் டைரக்டர் என்னைப் பார்த்துவிட்டு இந்தக் கேரக்டரை நான் செய்தால் நல்லா இருக்கும் என்று சொன்னார். அதுதான் என்னோட முதல் சீரியல். அதன் பிறகு பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் மூலமாக மற்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

தங்கம் தொடரில் கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். அந்த சீரியலில் காவேரி அக்காதான் எப்பவுமே எல்லாரையும் டாமினேட் செய்வாங்க. ஆனா நான் அவுங்களுக்கு டென்ஷன் கொடுக்கிற மாதிரி எதிர்த்து சண்டை போடுவேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கிறது. அதனாலயே என் கேரக்டர் மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆகியிருக்கிறது. வெளியே எங்கயாவது ஆடியன்ஸ் பார்த்தாகூட நீங்க ரெண்டு பேரும் ஸ்கிரீன்ல வந்தாலே ரொம்ப இன்ட்ரஸ்ட்டா பார்ப்போம்'னு சொல்லுவாங்க.

நடனம் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏதாவது பாட்டுபோட்டுவிட்டு நானும் என் சிஸ்டரும் ஆடிக்கிட்டு இருப்போம். கலா மாஸ்டரோட சிஸ்டர் ஜெயந்தி அக்காவிடம் தான் நடிகர் சங்கத்துல போய் டான்ஸ் கற்றுக்கொண்டேன். நடிப்புக்கு அடுத்தபடியா எனக்கு டான்ஸ்தான் ரொம்ப பிடிக்கும்.

நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டால் நடிப்பில் சரியா கவனம் செலுத்த முடியாது. ஒர்க் லோட் அதிகமாகிவிடும். சின்னத்திரை நிகழ்ச்சி, நட்சத்திர விழா எல்லாம் வரும் போது நடன நிகழ்ச்சிகள் செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனால் போட்டிகள்ல கலந்துக்க விருப்பமில்லை.

என்னை பொருத்தவரை பெண்கள் யாரும் அடிமையாக இருக்க கூடாது. சுதந்திரமா செயல்படணும். எப்பவும் தன்னம்பிக்கையோட இருக்கணும்,யாரையும் சார்ந்து வாழக் கூடாதுன்னு நினைப்பேன்.

 

Post a Comment