தமிழ் இயக்குநர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து ஒரு தமிழ் - கன்னட இரட்டை மொழிப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன், என்று கன்னடத்தின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் கூறியுள்ளார்.
முகமூடி இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்த புனித் ராஜ்குமாரிடம் பேசினோம்.
தமிழ் சினிமா விழாவில் முதல் முறையாக பங்கேற்றது குறித்து கேட்டபோது, "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.." என்றார் நல்ல தமிழில்.
"இத்தனைக்கும் நான் சின்ன வயசு வரைக்கும் சென்னையில்தான் இருந்தேன். ட்ரஸ்ட்புரத்தில இன்னும் எங்க வீடு இருக்கு. அடிக்கடி சென்னைக்கு வந்திடுவேன். ஆனா சினிமா நிகழ்ச்சியில கலந்துகிட்டது இதுதான் முதல் முறை. எனக்கு சென்னை மக்களை, சென்னை உணவுகளை ரொம்பப் பிடிக்கும். வாய்ப்பு கிடைச்சா இனி அடிக்கடி பங்கேற்பேன்," என்றார்.
தமிழில் சூப்பர்ஹிட் படமான நாடோடிகளின் கன்னட ரீமேக்கில் புனித் ராஜ்குமார் நடித்திருந்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. இப்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் போராளி படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "தமிழ் இயக்குநர்களுடன் பணியாற்றுவது எங்கள் குடும்பத்துக்கே மகிழ்ச்சி தரும் விஷயம். தமிழ் இயக்குநர்கள் அத்தனை திறமையாளர்கள். இதற்கு முன்பும் சிங்கீதம் சீனிவாசராவ், பி வாசு போன்றவர்களுடன் பணியாற்றியுள்ளோம். என் தந்தைக்கு பூர்வீக கிராமமே தமிழ்நாட்டில்தான் உள்ளது. எங்கள் குடும்பத்தின் மிகச் சிறந்த நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி இங்குதான் உள்ளார். விக்ரம், சூர்யா போன்றவர்களுடனும் நான் நல்ல நட்பில் இருக்கிறேன். எனவே நானும் இந்த தமிழ் சினிமாவில் ஒருவனாகத்தான் உணர்கிறேன். நிச்சயம் ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிப்பேன்" என்றார்.
கவுதம் மேனனுடன் நீங்கள் பணியாற்றுவதாக கூறப்பட்டதே...
ஆமாம்.. நாங்கள் இருவரும் பேசினோம். ஆனால் எதுவும் உறுதியாகவில்லை. எங்கள் வேலைகளில் பிஸியாகிவிட்டோம். ஆனால் நிச்சயம் ஒரு நாள் கைகூடும் என நம்புகிறேன்," என்றார்.
Post a Comment