நதிகள் இணைப்பு ஒன்றுதான் இந்தியாவைக் காக்கும் - கவிஞர் வைரமுத்து

|

Nationalisation Rivers Only Can Sav

தஞ்சாவூர்: நதிகள் இணைப்பு மட்டுமே எதிர்வரும் நாட்களில் தேசத்தைக் காக்கும். இல்லையேல் இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து வந்துவிடும் என்றார் கவிஞர் வைரமுத்து.

தஞ்சையில் திங்கள்கிழமை நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், "இந்தியாவில் நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இந்திய ஒருமைப்பாடு சிதறி விடும். நதிகளை இணைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை என்று சிலர் கூறுவது தவறானது.

ரஷியாவில் நதிகளை இணைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவில் அந்த சிரமம் ஏற்படாது. உலக அளவில் நதிகள் இணைப்புக்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன.

தொழில்நுட்பம் நிறைந்த நூற்றாண்டாக கருதும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் நதிகள் இணைப்பு என்பது சாத்தியமான ஒன்றுதான். இரண்டு மாநிலங்களுக்கு இடையில் உரிமை உள்ள போதே சிக்கல் வரும் நிலையில், பல மாநிலங்களை நதி கடக்கும் போது சிக்கல் ஏற்படுவது இயல்புதான்.

மதத்தினாலோ, ஜாதியினாலோ, இனத்தினாலோ ஒருமைப்பாடு வராது. நதிகளை இணைத்து திரவச்சங்கிலி என்ற முடிச்சால் மட்டுமே ஒருமைப்பாடு ஏற்படும்.

இந்தியாவுக்கு உபரிநீரும், உபரி மின்சாரமும் தேவைப்படுகிறது. இதனை உருவாக்கினால் மட்டுமே இந்தியா வல்லரசாக முடியும். இந்தியாவிலுள்ள 40 சதவீதம் நிலங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நதிகளால் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

உலகளவில் 33 சதவீதம் வனமாக இருக்க வேண்டும். நாம் ஒரு மரத்தை வெட்டினால் 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.

இந்தியாவில் கால்நடைகள் இழப்பிற்கு பின்னரே இயற்கை விவசாயம் குறையத் தொடங்கியது. ஆடு, மாடுகளை செல்வமாக பாவித்த நாம் இப்போது அதனை இழந்து விட்டோம். வணிக நோக்கத்தால் நமது மரபுவழித் தத்துவங்கள் மறுதலித்து விட்டன. 3 ஆம் உலகப்போர் புத்தகம் தற்போது 3-வது பதிப்பு அச்சாகி வருகிறது. மூன்றாம் உலகப் போரும், புவிவெப்பமயமாதலும் என்ற குறுந்தகடு பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்," என்றார்.

 

Post a Comment