தன்னை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவள் என்று சொல்லிய முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயன் மீது மான நாஷ்ட வழக்கு தொடரப் போவதாக நடிகை ஊர்வசி தெரிவி்ததுள்ளார்.
நடிகை ஊர்வசி தன்னுடைய கணவர் நடிகர் மனோஜ் கே.ஜெயனிடம் இருந்து விவகாரத்து பெற்றார். அவர்களது மகள் குஞ்ஞட்டா மனோஜுடன் அனுப்பப்பட்டார். ஆனால் தம்மிடம் மகளை ஒப்படைக்கக் கோரி ஊர்வசி எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட நாட்களில் மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவிட்டது.
இதற்கு மனோஜ் கே. ஜெயன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதில் ஜூலை 6ம் தேதி முதல் ஒருவார காலத்துக்கு மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வைத்து தான் ஊர்வசியிடம் குழந்தையை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதற்காக எர்ணாகுளம் நீதிமன்றத்துக்கு ஊர்வசி, மனோஜ் கே ஜெயன், அவர்களது மகள் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை வந்திருந்தனர். ஆனால் ஊர்வசியுடன் மகள் செல்ல மறுத்துவிட்டார். மேலும் ஊர்வசி எப்போதும் போதையில் இருப்பதால் அவரை நம்பி மகளை ஒப்படைக்க முடியாது. இப்போதும் அவர் குடிபோதையில் தான் இருக்கிறார் என்று மனோஜ் கே ஜெயன் நீதிபதியிடம் புகார் தெரிவித்தார்.
இது குறித்து நேற்று ஊர்வசி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அண்மையில் தான் எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் நான் தற்போது மருந்து, மாத்திரைகள் எடுத்து வருகிறேன். மருந்து, மாத்திரைகளின் தாக்கத்தால் தான் நான் நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது போதையில் இருந்தது போன்று தெரிந்தது. அப்படி இருக்கையில் மனோஜ் நான் குடிபோதையில் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் சமுதாயத்தில் எனது பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நான் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்றார்.
Post a Comment