போலீஸ் அதிகாரி வேடமா கூப்பிடுங்கள் அவரை என்று கூறும் அளவிற்கு பிரபலமானவர் ராஜேந்திரநாத். 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் தென்றல் சீரியலில் வாழ்க பாரதம் என்று பேசி வில்லத்தனம் செய்ததால் எளிதில் பிரபலமாகிவிட்டார்.
திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜேந்திரநாத், தியேட்டர் உரிமையாளர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளின் பட விநியோகஸ்தர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்படக் கல்லூரியின் இயக்குநர் பிரிவில் பயின்ற மாணவர் மற்றும் ஒளிப்பதிவாளர் போன்ற பல முகங்களைக் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். ஆஜானுபாகுவான உடலமைப்போடு, உருட்டும் விழிகளுடன் பார்ப்பவரை வெளியிலிருந்தும் காணும் நம்மை சற்று பயம் தொற்றிக்கொள்ளவே செய்யும். பல திரைப்படங்களில் நடித்தும் கிடைக்காத புகழ், ஒரேயொரு சீரியலில் கிடைத்திருப்பது இவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தனது சீரியல் பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்
புத்திசாலித்தனம், ரவுடியிசம் இரண்டும் கலந்த ஒரு கேரக்டர் இருக்கிறது. நடிக்கிறீர்களா? என்று `தென்றல்' சீரியலின் இயக்குனர் குமரன் கேட்டபோது, முதலில் தயங்கினேன். சினிமாவில் நடித்துவிட்டு சீரியல் நடிப்பதா? என்று யோசனையாக இருந்தது. இயக்குனர்மீது நம்பிக்கை வைத்து ஒப்புக்கொண்டேன்.
பொதுவாக சினிமாவில் வசனங்கள் அதிகம் இருக்காது. அப்படி இருந்தாலும் பிரித்துப் பிரித்து பேசவைத்து படம் பிடித்து விடுவார்கள். சீரியலில் அது நடக்காது. வசனம் பக்கம் பக்கமாக கொடுத்து நடிக்கச் சொல்வார்கள். ஆரம்பத்தில் சற்றே சிரமமாகத் தெரிந்தது. போகப்போக பழகி விட்டது. இதன் விளைவு, இப்போது சினிமாவில் பெரிய வசனம் என்றாலும் ஒரே டேக்கில் சுலபமாக பேசி விடுகிறேன்.
இதுவரைக்கும் 95 படங்கள் நடித்து முடித்து விட்டேன். வெளியில் பார்த்தால் யாராவது ஒன்றிரெண்டு பேர் என்னை உற்றுப்பார்ப்பார்கள். தயங்கித்தயங்கி நீங்கள் இந்தப்படத்தில் நடித்தீர்கள் தானே என்று கேட்பார்கள். அத்தோடு சரி. ஆனால் `தென்றல்' தொடரில் எப்போது நடிக்க ஆரம்பித்தேனோ அப்போது முதலே எந்த ஊரில் எந்த இடத்தில் பார்த்தாலும் `வாழ்க பாரதம்' என்ற குரல் கொடுக்கிறார்கள். பெண்கள், சிறுவர்கள் கூட உற்சாகமாய் என் கேரக்டர் பற்றியும், கதை பற்றியும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். சீரியல் நடிப்பில் இது எனக்கு கிடைத்த பரிசாகவே இதை உணருகிறேன். தொடர்ந்து பெரியதிரை, சின்னத்திரை இரண்டிலும் நடிப்பை தொடர்வேன் என்று மகிழ்ச்சியாய் சொன்னார் ராஜேந்திரநாத்.
Post a Comment