தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மீன் கொத்தி இசை வெளியீட்டு விழாவுக்கு வராமல் புறக்கணித்துவிட்டார் இயக்குநர் சஞ்சய் ராம். அவருடன் சேர்ந்து இசையமைப்பாளரும் வராமல் இருந்துவிட்டார்.
தமிழ் சினிமாவில் இயக்குநரும் இசையமைப்பாளரும் இல்லாமல் நடந்த இசை வெளியீட்டு விழா அநேகமாக மீன்கொத்தியாகத்தான் இருக்கும்.
அன்புள்ள ரஜினிகாந்த், சோலைக்குயில், சித்திரைப்பூக்கள், தர்மபத்தினி போன்ற படங்களை தயாரித்தவர், அழகன் தமிழ்மணி. இவர், 'மீன் கொத்தி' என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் அவருடைய மகன் அஜய் கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
'தூத்துக்குடி' உள்ளிட்ட படங்களை இயக்கிய செய்த சஞ்சய்ராம் இயக்கியுள்ளார். தினா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை தியாகராயநகர் கிளப்பில் நடந்தது.
விழாவில், இயக்குநர் சஞ்சய்ராம் கலந்து கொள்ளவில்லை. தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் விழாவை புறக்கணித்ததாக கூறப்பட்டது.
படத்தின் இசையமைப்பாளர் தினாவும் விழாவுக்கு வரவில்லை. "நிகழ்ச்சிக்கு வரமுடியாத தகவலை ஏற்கனவே தயாரிப்பாளருக்கு தெரிவித்து விட்டேன்'' என்று தெரிவித்துள்ளார் தினா.
விழாவுக்கு கவிஞர் பிறைசூடன் தலைமை தாங்கினார். போலீஸ் ஐ.ஜி. ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், பட அதிபர்கள் சிவசக்தி பாண்டியன், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், யார் கண்ணன், இளவேனில், தி.நகர் கிளப் செயலாளர் அசோக் ஆகியோர் விழாவில் பங்கேற்று வாழ்த்தினர்.
Post a Comment