ராஜ் டிவியில் நடைபெற்ற ‘புதியதோர் கவிஞன் செய்வோம்' ‘தமிழகத்தின் தங்கக் குரலோன்' நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற கவிஞர்கள், பாடகர்களுக்கு தங்களின் அடுத்த திரைப்படங்களில் வாய்ப்பு வழங்கப்படும் என்று இயக்குநர் வசந்த், இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளனர்.
ராஜ் டி.வியில் செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "புதியதோர் கவிஞன் செய்வோம் நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிசுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களின் கவிதைகளுக்கு எங்கேயும் காதல் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்தார். பல்வேறு சுற்றுக்களையும் வெற்றிகரமாக கடந்து இறுதிச்சுற்றில் நுழைந்த கவிஞர்கள் பலரும் தங்களின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்க இயக்குநர் லிங்குசாமியும், இயக்குநர் கரு. பழனியப்பனும் இணைந்து புதிய கவிஞராக சுந்தரராமனை வெற்றியாளராக அறிவித்தனர். அவருக்கு சிறந்த கவிஞருக்கான பரிசினை கவிஞர் அறிவுமதி வழங்கினார்.
அதேபோல் தமிழ்நாட்டில் தங்கக்குரலோனாக ஜிதேஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கான பரிசினை இயக்குநரும் இசை அமைப்பாளருமான கங்கை அமரன், இயக்குநர் வசந்த் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய இயக்குநர்கள் வசந்த், லிங்குசாமி ஆகியோர் சிறப்பு வாய்ந்த இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்களின் அடுத்த படத்தில் பாடல்கள் எழுதவும், பாடல் பாடவும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்த உடன் பார்வையாளர்களிடம் இருந்து மகிழ்ச்சியான கரகோஷம் கிளம்பியது.
Post a Comment