கமல் என்ற 'ஆச்சர்ய'த்திடம் வாழ்த்துப் பெற்ற புது இயக்குநர்!

|

Kamal Blesses Debutant Director  
சில ஆண்டுகளுக்கு முன் கமல் ஹாஸன் திரைக்கதை பயிற்சிப் பட்டறை ஒன்றை ஐஐடி வளாகத்தில் நடத்தியதும், அதில் 250 க்கும் அதிகமான இளம் படைப்பாளிகள், ஆர்வலர்கள் பங்கேற்றதும் நினைவிருக்கலாம்.

அந்தப் பட்டறையில் பங்கேற்றவர்களில் ஒருவரான ஹர்ஷவர்த்தன் இப்போது 'ஆச்சர்யங்கள் அன்லிமிடட்' என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல் காட்சிகளை தனது 'குரு' கமல்ஹாஸனிடம் காட்டி வாழ்த்திப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஹர்ஷவர்த்தன் கூறுகையில், "30 ஆண்டுகளாக நான் விரும்பும் சினிமாவை எடுக்க ரத்தம் சிந்தி வருகிறேன். இனியும் சிந்தத் தயாராக இருக்கிறேன், என்று திரைக்கதைப் பயிற்சிப் பட்டறையில் கமல் சார் கூறியதுதான் என்னை இந்த சினிமா எடுக்க வைத்தது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் என்னைப் போன்றவர்களுக்கும் பங்கிருப்பதை உணர வைத்தவர் கமல்தான்.

அதன் விளைவுதான் ஆச்சர்யங்கள் என்ற படம். இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. விறுவிறுப்பான திரைக்கதையை நம்பி எடுத்துள்ளேன்.

இந்தப் படத்தை கமல் சாரிடம் காட்டி ஆசி பெற விரும்பினேன். நான், கேமரா மேன் மற்றும் ஹீரோ மட்டும் போய் கமலைப் பார்த்து படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகளைக் காட்டினோம். நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை என்ற தகவலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட கமல், படம் குறித்து நிறைய பேசினார்.

எனக்கு வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் கூறி அனுப்பி வைத்தார். மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் அது," என்றார்.
 

Post a Comment