ரியாலிட்டி ஷோக்களுக்கு நோ சொல்லிட்டேன்: சின்னத்திரை ஸ்ரீவித்யா

|

Small Screen S Neelambari Srividya
தென்றல் தொடரில் சைக்கோ கேரக்டரில் நடித்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கியவர் ஸ்ரீ வித்யா. திருமணம் முடிந்த உடன் சீரியலுக்கு கொஞ்சம் பிரேக் விட்டிருக்கிறார். மணவாழ்க்கையை ஜாலியாக அனுபவித்துக் கொண்டிருந்தவரிடம் அவரின் சின்னத்திரை பயணம் குறித்து கேட்டோம்.

சிறுமியாக இருந்தபோதே சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என ஆசைப்பட்டேன். அது போலவே இப்போது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நடிகை ஆகி விட்டேன். ஆனால் சினிமா மட்டும் "மிஸ்' ஆகி விட்டது. பள்ளிப் பருவமே என்னை நடிகையாக்கி விட்டது. பள்ளியில் நடக்கும் நாடகங்களில் நடித்ததுதான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. நடிக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு சினிமாதான் என் கண்களில் தெரிந்தது.

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் திரைப்படத்தில் எட்டு வயதில் நடிக்க ஆரம்பித்தேன். ஒரு சில சினிமாக்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த பின்னர் சீரியல் ஆர்வம் தொற்றிக் கொண்டது. சீரியல் சூட்டிங், ரியல் எஸ்டேட் புரமோட்டர்ஸ் காம்பயரிங், படிப்பு, விளம்பர சூட்டிங் அப்படின்னு பரபரப்பா போயிட்டு இருந்தது. திருமணத்திற்காக சீரியலுக்கு கொஞ்சநாள் பிரேக் விட்டு வாழ்க்கையை ரசிச்சுகிட்டு இருக்கேன் என்றார்.

சினிமாவில் சாதிக்க முடியாததை சீரியல்களில் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தால் நான் சீரியல் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன். சீரியலில் ஒரே நேரத்தில் பல வித கேரக்டர்களை செய்வது எனக்கு பிடித்திருக்கிறது. சினிமாவில் எவ்வளவுதான் உழைத்தாலும் இப்போது சீரியல்களில் வாங்கியுள்ள பெயரை வாங்க முடியாது என்றே நினைக்கிறேன்.

ஏனெனில் சினிமாவில் நாயகனுக்கும் நாயகிக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சீரியல்கள், ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அலங்கரிக்கின்றன. நானும் அவ்வப்போது ஓரிரு சினிமாக்களில் வருவேன். அதுவும் சினிமா நண்பர்களால்தான். மற்றபடி எனக்கு சினிமாவில் ஆர்வம் குறைந்து விட்டது. சினிமாக்களைப் பார்ப்பதோடு மட்டும் சரி.

இப்போது எல்லோர் வீட்டிலும் அமைதியான பெண்ணாக, துறுதுறு மாணவியாக, அழகான காதலியாக, அன்பான மகளாக, சில நேரங்களில் வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்.

சினிமாவில் உச்சக்கட்டத்தில் இருந்த நடிகைகளே இறுதியாக வந்து சேரும் இடம் சீரியல் என்பதில் என்னைப் போன்றவர்களுக்கு கொஞ்சம் பெருமைதான். அவர்களோடு போட்டி போட்டு நடிப்பதில் சந்தோஷம் இருக்கிறது. அந்த போட்டி நிச்சயம் சீரியல் உலகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியும். எத்தனையோ ரியாலிட்டி ஷோக்களில் நடனமாடவும், ஜட்ஜ் ஆக பங்கேற்கவும் அழைப்பு வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லாததால் பெரிய நோ சொல்லிவிடுகிறேன் என்று கூறி சிரித்தார் சின்னத்திரை நீலாம்பரியான ஸ்ரீ வித்யா.
 

Post a Comment