இளையராஜாவின் ஆசை நூறு வகை பாடலை அப்படியே 'காப்பியடிக்க' தடை!!

|

Hc Orders Not Use Ilayaraaja S Tune For Department

ஒரு முறை இளையராஜாவிடம், "உங்கள் பாடல்கள் பலவற்றை தொடர்ந்து இந்தி, தெலுங்கு, ஏன் தமிழில் கூட காப்பியடிக்கிறார்கள். நீங்கள் அமைதியாகவே இருக்கிறீர்களே?" என்று கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு அவர் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு, அடுத்த கேள்வி என்றார்.

மீண்டும் அதே கேள்வியைக் கேட்ட போது, திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்... என்ற பட்டுக்கோட்டை வரிகளைா மட்டும் சொல்லிவிட்டு, அடுத்து வேற ஏதாவது கேளுங்கய்யா என்றார் செல்ல கோபத்துடன்.

ஆனால் எப்போதும் இதே மனநிலையில் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ன.... இசைத் தென்றல் இந்த முறை புயலாகிவிட்டது!

இந்தியில் ராம் கோபால் வர்மா உருவாக்கியுள்ள டிபார்ட்மென்ட் படத்தில் இளையராஜாவின் அதிரடி ஹிட் பாடலான ஆசை நூறு வகையை அப்படியே சுட்டுப் போட்டிருந்தார்கள். இதுகுறித்த சர்ச்சை வெளியானபோது, ராஜாவிடம் அனுமதி கேட்டுத்தான் பயன்படுத்தியதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் தனது வக்கீல் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிட்டார் இளையராஜா.

தனது மனுவில், "நான் இசை அமைத்த, ‘ஆசை நூறு வகை.. வாழ்வில் நூறு சுவை‘ என்ற பாடலின் டியூனை இந்தியில் தயாரான ‘டிபார் ட்மென்ட்' என்ற படத்தில் வரும் பாடலுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டனர். அதன்படி, பாடலில் 30 நொடிகள் மட்டும் அந்த டியூனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தேன்.

ஆனால், பாடல் முழுவதும் இந்த டியூன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நான் ஆட்சேபனை தெரிவித்தேன். அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லை. எனவே, இந்தி படத்தில் வரும் முழு பாடலிலும் எனது டியூனை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்," என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இளையராஜாவின் டியூனை இந்தி படத்தில் பயன்படுத்த ஒரு வாரம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

 

Post a Comment