இமெயில் அனுப்பியும், மெசேஜ் அனுப்பியும் தன்னுடன் பேசுமாறு தொடர்ந்து அணத்தி வரும் தங்களது தாய் டெமி மூர், தங்களுடன் பேசுவதற்கு சட்டப் பூர்வமான தடை உத்தரவை வாங்க அவரது மூன்று மகள்களும் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹாலிவுட்டின் முன்னாள் கனவுக் கன்னி டெமி மூர் இப்போது பெரும் சோகத்தில் இருக்கிறார். அவருக்கு மொத்தம் மூன்று கணவர்கள். முதல் கணவர் பெயர் பிரெடி மூர். இவருடன் சிறிது காலம் வாழ்க்கை நடத்திய பின்னர் ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸை மணந்தார் டெமி மூர். இந்த வாழக்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
ப்ரூஸ் வில்லிஸ் மூலம் ரூமர் வில்லிஸ், ஸ்கவுட் வில்லிஸ், தலுவா வில்லிஸ் என மூன்று மகள்களைப் பெற்றெடுத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ப்ரூஸை விவாகரத்து செய்தார் டெமி. பின்னர் மூன்று வருடம் நடிகர் ஆஷ்டன் கச்சருடன் டேட்டிங் பண்ணிங் கொண்டிருந்தார். பிறகு அவரை மணந்தார். ஆனால் இதுவும் கூட வெற்றிகரமாகத் திகழவில்லை.
இதனால் மனம் நொந்த நிலையில் இருக்கும் டெமி மூர் தனது மகள்களுடன் மீண்டும் தொடர்பு வைத்துக் கொள்ள முயன்று வருகிறார். ஆனால் மகள்களோ, தாயுடன் பேசுவதை விரும்பவில்லை. இதனால் தொடர்பு கொள்ள மறுத்து வருகின்றனர்.
இருந்தாலும் விடாமல் தொலைபேசி மூலமும், எஸ்எம்எஸ் மூலமும், இமெயில் மூலமும் தனது மகள்களைத் தொடர்பு கொண்டு என்னோடு பேசுங்கள் என்று கெஞ்சி வருகிறார் டெமி மூர். ஆனாலும் மகள்கள் இறங்கி வருவதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் தங்களது தாயாரின் இந்த கெஞ்சலை தொல்லையாக கருதும் மூன்று மகள்களும், டெமி மூர் தொடர்ந்து தங்களைத் தொடர்பு கொள்ள தடை விதிக்கக் கோரி சட்டப்பூர்வமான உத்தரவைப் பெற முடிவு செய்துள்ளனராம்.
இதை அறிந்து டெமி மூர் மேலும் சோகமடைந்துள்ளாராம். மகள்களுடன் எப்படியாவது பேசி விட வேண்டும் என்று தொடர்ந்தும் முயற்சித்தபடி இருக்கிறாராம்.
பெத்த மனசாச்சே... ஹாலிவுட்டாக இருந்தாலும் பதறத்தானே செய்யும்!
Post a Comment