பூச்சி முருகனும், நடிகர் சங்க உறுப்பினரான காஜா முகைதீன் ஆகியோர் இணைந்து தாக்கல் செய்துள்ள மனுவில்,
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில், நடிகர் சங்கத்துக்கு 18 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 150 கோடி ரூபாய். சங்கத்துக்கு இடம் வாங்கி, அதில் கட்டடம் கட்டப்பட்டதில், சினிமா துறையில் சிறந்து விளங்கிய கே.சுப்ரமணியன், என்.எஸ்.கிருஷ்ணன், சகஸ்ரநாமம், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் பங்களிப்பு பெரிது.
பெரும்பான்மை உறுப்பினர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல், பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறாமல், சங்கத்தின் கட்டடம் தரைமட்டமாக ஆக்கப்பட்டது. இது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது மட்டுமல்லாமல், நடிகர் சங்க அறக்கட்டளையை நம்பிக்கை மோசடி செய்தது போலாகும்.
ஏழைக் கலைஞர்களின் குடும்பத்துக்கு கல்வி, மருத்துவ வசதிகளை அளிப்பது தான், அறக்கட்டளையின் நோக்கம். அறக்கட்டளையானது நிர்வாக அறங்காவலர் சரத்குமார், அறங்காவலர் ராதாரவி ஆகியோரை கொண்டு இயங்குகிறது. இவர்கள் இருவரும் உறவினர்கள். இவர்களின் நடவடிக்கைகள், பல்வேறு கேள்விகளை உறுப்பினர்களின் மனதில் எழுப்பியுள்ளது.
அறக்கட்டளையின் போர்டு இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த இரண்டு பேரும் தான் அறக்கட்டளை தொடர்பான முடிவுகளை எடுக்கின்றனர். சங்கத்தின் பொதுச் செயலர் என்கிற முறையில் ராதாரவி, சொத்துகளுக்கான குத்தகையை சரத்குமார் பெயரில் வழங்கினார். அறக்கட்டளையின் சொத்தில் வர்த்தகத் திட்டத்தை மேற்கொள்ள, சட்டப்பூர்வமான ஏஜன்ட் ஆக சரத்குமாரை, ராதாரவி நியமித்து, பவர் ஆப் அட்டர்னி கொடுத்துள்ளார்.
இவ்வாறு குத்தகை, பவர் ஆப் அட்டர்னி வழங்க, இவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. மேலும், 2010ம் ஆண்டு நவம்பரில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, எஸ்.பி.ஐ., சினிமா நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அறக்கட்டளை போர்டை நியமிக்காமல், சொத்து பரிவர்த்தனையில் ஈடுபட, சரத்குமார், ராதாரவிக்கு அதிகாரமில்லை. குத்தகை ஒப்பந்தம் மேற்கொண்ட பின், சிறப்பு பொதுக்குழுவைக் கூட்டி, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ., சினிமா நிறுவனத்துடன் செய்து கொண்ட குத்தகை ஒப்பந்தத்துக்கு, சங்கத்தின் முன் அனுமதியை முதலில் பெறவில்லை. சிறப்பு பொதுக் குழுவில் தான் பெறப்பட்டது.
அறக்கட்டளை போர்டு அமைக்காமல், இரண்டு பேரும் செயல்பட்டுள்ளனர். எனவே, எஸ்.பி.ஐ., சினிமா நிறுவனத்துக்கு சரத்குமார், ராதாரவி வழங்கிய குத்தகை செல்லாது என உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி சுப்பையா, சரத்குமார், ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Post a Comment