செல்லமே தொடரின் தொடக்கத்தில் சிரித்துக்கொண்டே வரும் கலைவாணி ( செல்லமாய் களவாணி) பின்னர் சீரியஸ் ஆகிவிட்டார். சின்னவயதில் இருந்தே நடிப்பதால் என்னவோ சோனியா போஸ்க்கு எந்த கதாபாத்திரம் என்றாலும் ஜஸ்ட் லைக் தட் தன்னுடைய சினிமா, சின்னத்திரை பயணம் குறித்தும் பெர்சனல் பக்கங்களையும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன்.
சினிமாவிலோ, சின்னத்திரையிலோ எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் செய்துவிடலாம். ஆனால், எல்லாரையும் சிரிக்க வைப்பதுதான் சிரமம். ‘செல்லமே' சீரியலில் சிரிப்பு பாத்திரத்திற்காகவே வீட்டிற்குப் போய் கண்ணாடி முன்னால நின்று ஒரு மணிநேரம் சிரித்துப் பழகுவேன். என் கணவர் பார்த்துவிட்டு உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்பார். கொஞ்ச நாள் அந்த மாதிரியேதான் திரிந்தேன். வெளியில் போகிறபோது சின்னச்சின்ன குழந்தைகள்கூட என்னைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள். இப்போது கதைக்கேற்ப சீரியஸ் ஆக நடித்து வருகிறேன்.
சினிமா என்றாலே ஒரு தப்பான துறை என்கிற மாதிரியான கருத்துகள் இருந்தன. இப்போது அது மாறிப் போய்விட்டது. சினிமாதுறையும் டிவி துறையும் நன்றாக வளர்ந்திருக்கின்றன. ஆரோக்கியமாகவும் இருக்கிறது. நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது பேபி அஞ்சு, மீனா, சாலினி என்று மூன்று நான்கு பேர் தான் இருப்போம். இப்போது ஏகப்பட்ட படங்கள் வருகின்றன. ஏகப்பட்ட பேர் நடிக்கிறார்கள். இது வளர்ந்திருப்பதைத்தானே காட்டுகிறது. இடையில் கொஞ்ச நாள்களுக்கு முன் கிளாமருக்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமையும் மாறிவிட்டது. புதுமுகங்களும் திறமை காட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. டிவி துறையிலும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
என் கணவர் கடந்த மூன்று வருடங்களாக தொடர்களில் நடிப்பதில்லை. இது வரை மூன்று தொடர்களில்தான் நடித்திருக்கிறார். பெரியதிரை வாய்ப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார். நான் நடிக்கும் தொடரைப் பார்ப்பதற்கு என் கணவருக்கு நேரம் இருக்காது. நான் சிறுவயதில் இருந்து நடிப்பதால் என்னிடம் ஆலோசனை கேட்பார். விமர்சனங்கள் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் என் திறமைக்கேற்ற பாத்திரம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவருக்கு உண்டு.
என் மகன் தேஜஸ்வின்னுக்கு ஐந்து வயதாகிறது. என் மகள் பவதாரணிக்கு ஒரு வயது தான் ஆகிறது. என் அப்பா, அம்மாவும் என் சித்தியும்தான் பார்த்துக் கொள்கிறார்கள். பெரியவனாவது என்னோடு கொஞ்சம் நாள் இருந்தான். ஆனால் மகள் தான் எட்டு மாதத்தில் இருந்தே அம்மாவிடம் வளர்ந்து வருகிறாள். நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி கிடைக்கும் நேரங்களில் குழந்தைகளை கவனித்துக்கொள்வேன் என்று பொறுப்பான அம்மாவாக கூறினார் சோனியா போஸ்.
Post a Comment