காதல் காட்சி... ஒட்டக சேஸிங்... காலை உடைத்துக் கொண்ட கதாநாயகி!

|

Thulli Vilayadu Heroine Deepthy Bro

வின்சென்ட் செல்வா இயக்கிவரும் துள்ளி விளையாடு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் தீப்தி, ராஜஸ்தானில் ஒரு காதல் காட்சி படமாக்கப்பட்டபோது காலை உடைத்துக் கொண்டார். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

ப்ரியமுடன் படம் மூலம் விஜய்க்கே பெரிய பிரேக் கொடுத்தவர் வின்சென்ட் செல்வா. தொடர்ந்து யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர், இப்போது துள்ளி விளையாடு என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையைப் படமாக்கி வருகிறார்.

படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியையும் அறிமுகம் செய்கிறார் வின்சென்ட் செல்வா.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வின்சென்ட் செல்வா படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பது இதுதான் முதல் முறை.

ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன் (ரவுத்திரம் - வில்லன்) சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா (நாடோடிகள்) மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரிக்கிறார். எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்கிறார்.வின்சென்ட் செல்வாவின் ஃபேவரிட் இசையமைப்பாளர்களுள் ஒருவரான ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்தது. கொளுத்தும் வெயில், தார் பாலைவன சூறைக்காற்றில் பறக்கும் மணல், ஒட்டகத்தில் ஹீரோயின் சவாரி போவதுபோன்ற பின்னணியில் ஒரு காதல் காட்சியைப் படமாக்கியிருக்கிறார் வின்சென்ட் செல்வா.

இந்தக் காதல் காட்சியின்போது ஒட்டகம் திடீரென வேகம் பிடிக்க, கதாநாயகி தீப்தி திக்கித் திணறிவிட்டாராம். பயத்தில் அலறியபடி அவர் கீழே விழுந்து கதறினராம்.

இதுகுறித்து இயக்குநர் வின்சென்ட் செல்வாவிடமே கேட்டோம்:

"நான் ஏற்கெனவே விஜய் நடித்த ப்ரியமுடன் படத்தின் பெரும் பகுதியை ராஜஸ்தானில் எடுத்திருக்கிறேன். இந்த முறை துள்ளி விளையாடு படத்துக்காக ராஜஸ்தான் சென்றோம். ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகங்கள் அப்படியொரு வேகத்தில் செல்கின்றன. ஒரு காரின் வேகத்தையும் மிஞ்சும் அளவுக்கு வேகமானவை ஒட்டகங்கள்.

கதாநாயகி தீப்தி நடித்தது ஒரு காதல் காட்சி. அந்தக் காட்சியில் கதாநாயகி ஒட்டகத்தில் வருவது போல எடுக்க நினைத்தோம். ஆனால் ஒட்டகத்தின் வேகத்தில் அவர் தூக்கி வீசப்பட்டுவிட்டார். வலது காலில் பலத்த அடி. காலில் லேசான எலும்பு முறிவு வேறு. அவர் சரியான பிறகு, அந்தக் காட்சியை வேறு மாதிரி எடுத்தோம்," என்றார்.

 

Post a Comment