மும்பை: ஷாருக் கான் நடிக்கவுள்ள புதிய படமான சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தில் அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கவில்லை என்று படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தான் கரீனாவை அணுகவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். ஷாருக்கான் அடுத்து சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இதை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இதற்கான நாயகி தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கரீனாவை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை ரோஹித் ஷெட்டி மறுத்துள்ளார். நான் கரீனாவை அணுகவில்லை. நான் இப்படம் செய்வது குறித்து கரீனாவுக்கும் தெரியும். ஆனால் அவரும் இதில் நடிக்க கேட்கவில்லை. நானும், அவரும் சேர்ந்து வேறு படம் செய்யும் வாய்ப்புண்டு. ஆனால் சென்னை எக்ஸ்பிரஸில் நிச்சயம் கரீனா இல்லை என்றார்.
இதற்கிடையே, தீபிகா படுகோனை ஷாருக்கானுடன் ஜோடி சேர்க்க முயற்சிகள் நடப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே ஓம் சாந்தி ஓம் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்தப் படத்திற்குப் பிறகுதான் தீபிகாவுக்கு பாலிவுட்டில் மவுசு கூடியது என்பதும் தெரிந்திருக்கலாம்.
சென்னை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருப்பதைப் பார்த்தால், படத்தை தமிழில் டப் செய்யும் ஐடியா இருக்குதோ என்னவோ...!
Post a Comment