போதும், போதும், இது படந்தானே டிரைலர் இல்லையே?

|

Billa 3 Coming Soon   

பில்லா படத்திற்கு ‘ஏ' சர்டிபிகேட் கொடுத்திருப்பதால் நீண்ட யோசனைக்குப் பின்னர் குழந்தைகளை விட்டுவிட்டு தனியாகத்தான் படத்திற்கு போக நேரிட்டது. படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை கொலைகள்தான். யாராவது யாரையாவது சுடுகிறார்கள். கழுத்தை அறுக்கிறார்கள். குண்டு வைக்கிறார்கள். (குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு தனியாக வந்தது நல்ல வேலையாக போயிற்று என்று நினைக்கத் தோன்றியது) வன்முறை அதிகம் என்பதால்தான் படத்திற்கு ‘ஏ' சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.

டேவிட் பில்லாவாக இருக்கும் அஜீத் டான் பில்லா! ஆவதுதான் படத்தின் ஒன் லைன். இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அகதியாக வரும் டேவிட் பில்லா, ஜார்ஜியாவில் உள்ள சர்வதேச கடத்தல்காரனுடன் டீல் பேசுகிறான். அதெப்படி அகதியாக வந்த டேவிட் பில்லா படம் ஆரம்பித்து அரைமணி நேரத்தில் கடத்தலில் எக்ஸ்பர்ட் ஆகிவிடுகிறான்? என்பதைப்பற்றி தெளிவான பின்னணியை கூற தவறி விட்டார் இயக்குநர் சக்ரிடோலட்டி. ஆனால் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றதற்காக இயக்குநருக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். அஜீத் ப்ளாஸ்பேக் என்று கூறி நேரத்தை கடத்தாமல் சிறுவயது நிகழ்வுகளை எழுத்துப் போடும்போதே போட்டோ வடிவில் காட்டியது புதிய முறை.

என்னதான் அண்டர்கிரவுண்டு தாதா படம் என்றாலும் தமிழ்நாட்டில் நடுரோட்டில் போலீஸ் அதிகாரிகளை சுட்டுவிட்டு மீனுக்குள் வைரம் கடத்தும் அஜீத்தைப் பற்றி யாருமே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா என்ன?. அதேபோல் சைவ ஓட்டல் நடத்தும் இளவரசு செய்யும் கடத்தல் தொழில் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. மீனுக்குள் வைரம் கொடுத்துவிட்டு அதை போலீசுக்கு போட்டுக்கொடுத்த நபரை ஒரே போடாக போட்டுவிட்டு ரூமுக்குள்ள பல்லி செத்து கிடக்கு அதை கிளீன் பண்ணிருங்க என்று சொல்லிவிட்டு செல்வது அசால்ட்.

தமிழ்நாட்டில் போதை மருந்தை கைமாற்றுவது அவ்வளவு எளிதான வேலையா என்ன? அதையும் அசராமல் செய்து முடிக்கும் அஜீத் கடைசியில் அந்த பொருளோடு கோவாவிற்கும் பயணமாகிறாராம்!. அங்கே சர்வதேச தாதா ஒருவரின் பொருட்களை அதிகாரிகள் முன்னிலையிலே எடுத்துக்கொண்டு வருகிறாராம். லாஜிக் என்பது துளிகூட இல்லாமல் எப்படி சார் படம் எடுக்கிறீர்கள் என்பதுதான் ரசிகர்களின் கேள்வி.

அகதிகள் முகாம் பாதுகாப்பு அதிகாரி, கோட்டியாக வரும் மனோஜ் கே. ஜெயன், கோவாவில் வசிக்கும் அப்பாசி (சுதன்சு பாண்டே) சர்வதேச டான் டிமிட்ரியாக வரும் (வித்யூத் ஜமால்), என படத்தில் வில்லன்களுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வில்லன்களையும் சமாளிக்கும் அஜீத்துக்கு ஒரே ஒரு நண்பன்தான். வேறு எந்த அடியாள் பலமோ, படைபலமோ கிடையாது. ஆனாலும் எல்லோரையும் கொன்றுவிட்டு அவர் மட்டும் தப்பிவிடுகிறார். (ஒருவேளை பில்லா 3 எடுப்பாங்களோ?)

படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்று ஆவலோடு எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கும். பார்வதி ஓமனக்குட்டன், புருணா அப்துல்லா இரண்டுபேருமே வேஸ்ட் ரகம்தான். கவர்ச்சிக்குப் பஞ்சமில்லாத உடைகள், பட தயாரிப்பாளர் நாயகிகளின் உடைக்காக அதிக செலவு செய்திருக்க தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதுவும் அப்பாசியின் காதலியாக வரும் புருணா பின்னர் பில்லாவின் காதலியாகிறார். அவரே வில்லியாக செயல்படுகிறார் என்பது ரொம்ப லேட்டாகத்தான் பில்லாவுக்கு தெரியவருகிறது. கடைசியில் அவரையும் கழுத்தை இறுக்கி கொன்று விடுகிறார்கள்.

படம் தொடங்கி பத்து நிமிடத்தில் 11 கொலைகள் என்பதை ஜீரணிக்கமுடியாத ஒரு ரசிகர் போதும் போதும் இது படந்தானே டிரைலர் இல்லையே என்று சத்தமாய் சொன்னது தியேட்டரில் சிரிப்பை ஏற்படுத்தியது. படத்தில் காமெடிதான் இல்லை, ஆனால் கதையும் இல்லை என்பதை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் இயக்குநர்.

இசை யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் நா. முத்துக்குமார். இருவரையும் இதில் காணோம். பின்னணி இசையில் வேண்டுமானால் யுவன் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறார். ஒளிப்பதிவை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். பனிபடர்ந்த வில்லனின் வீடு படம் முடிந்த பின்னரும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அதேபோல் கோவாவில் அப்பாசியின் படகு வீடு, குளுகுளு கோவா என ஒளிப்பதிவிற்கு கொஞ்சம் பாராட்டலாம்.

'எழுத்து' போடும் போது வசனம் இரா. முருகன், முகம்மது ஜபார் என்று போட்டார்கள். மொத்தமே இரண்டு பக்கத்தில் வசனத்தை எழுதி முடித்திருப்பார்கள் போல. யாருமே அதிகம் பேசியதாக தெரியவில்லை. அஜீத் பேசுவது கூட பஞ்ச் டயலாக் போல இரண்டே வரிக்கள்தான். "என்னோட ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் நானே செதுக்கியது" விசிலும் கைத்தட்டலும் தூள் பறக்கிறது. அதேபோல் தீவிரவாதிக்கும், போராளிக்கும் அஜீத் சொல்லும் விளக்கம் சூப்பர்.

படம் முழுக்க அஜீத் ராஜாங்கம்தான். அவர் நின்றால்- கொன்றால், கைத்தட்டல் பறக்கிறது. இது முற்றிலும் அஜீத் ரசிகர்களுக்கான படம் மட்டுமே என்பதில் சந்தேகமே இல்லை. மற்றவர்களுக்கு படம் பிடிக்குமா என்பதும் சந்தேகமே...

படம் முடிந்து வெளியே வரும் போது பில்லா 3 எப்போ எடுப்பாங்க? என்று ஒரு ரசிகர் கேட்டது காதில் விழுந்தது. ஒரு வேளை எடுத்துருவாங்களோ....!

பில்லா 2 - ஸ்பெஷல் விமர்சனம்

 

+ comments + 1 comments

16 July 2012 at 10:47

ajith voda mass ah ketuthutanga
velipadaya sonna intha padathin nan oru chinna work la irunthana appothey solli irupen ajithidam screen play va mathi elutha solli thevai ilamal ajith voda mass ketuthutanga ennidam kidathal director chance..............

Post a Comment