டாக்டருக்கு படிக்க சென்ற ஹீரோயின் தனன்யா மீண்டும் நடிக்க வந்தார். 'குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்' படத்தில் நடித்தவர் தனன்யா. இப்படத்துக்கு பிறகு எம்பிபிஎஸ் படிக்க சென்றார். தற்போது 'வெயிலோடு விளையாடு' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இதுபற்றி பட இயக்குனர் என்.வி.ராம்குமார் கூறியதாவது: 'வெண்ணிலா கபடி குழு', 'சென்னை 28' உள்ளிட்ட பல படங்கள் விளையாட்டை மையமாக வைத்து வந்திருக்கிறது. இதுபோன்ற படங்கள்தான் என்னை 'வெயிலோடு விளையாடு' கதையை எடுக்க தூண்டியது. சிறுவயதிலிருந்தே கைப்பந்து ஆடுவதில் ஆர்வமாக இருக்கும் ஒருவன் அதை ஆடுவதற்கு மைதானம் இல்லாமல் கஷ்டப்படுகிறான். எப்படியாவது ஒரு இடம் வாங்கி அதை கைப்பந்து விளையாட்டு மைதானமாக்க வேண்டும் என்று எண்ணுகிறான். அவனது ஆசை நிறைவேறுகிறதா என்பதே கதை. மகேஷ் ஹீரோ. ஹீரோயின் தனன்யா. இவர் 'குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்' படத்தில் நடித்தவர். அப்படத்துக்கு பிறகு எம்.பி.பி.எஸ். படிக்க சென்றுவிட்டார். இந்த வேடத்துக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்றபோது படிப்பை காரணம் காட்டி நடிக்க மறுத்தார். கதையை கேளுங்கள். பிடித்தால் நடியுங்கள், இல்லாவிட்டால் நடிக்காதீர்கள் என்றேன். கதை கேட்டார். பின்னர் ஒப்புக்கொண்டார். அதேநேரம் டாக்டர் படிப்பையும் அவர் விடவில்லை. படித்துக்கொண்டே இப்படத்திலும் நடித்துக்கொடுத்தார். ஒளிப்பதிவு மசானி. இசை கார்த்திக்ராஜா. தயாரிப்பு பாலகுரு, குமரேசன், பழனிவேல். இவ்வாறு இயக்குனர் ராம்குமார் கூறினார்.
Post a Comment