'சிவாஜியின் பேரன்' சிவாஜி தேவ் - மித்ரா குரியன் நடிக்கும் நந்தனம்!

|

Sivaji Dev Mithra Starring Nandanam Love 21st Century

காதலை பல கோணங்களில் கோடம்பாக்கத்துக்காரர்கள் சொல்லிவிட்டார்கள். இன்றைய கால கட்டத்தில் காதலிக்க ஏழு வருடங்கள் தேவையில்லை. ஏழு நாட்கள் போதும்...என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம்தான் நந்தனம்.

இன்றைய பெண்களும் சரி பசங்களும் சரி வாழ்க்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தியே தங்கள் சக துணையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற மையக்கருவை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் புது இயக்குநர் என்சி ஷியாமளன். ஏ வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இவர்.

சிங்கக்குட்டி படத்தின் மூலம் மிகப் பிரமாண்டமாக அறிமுகம் செய்யப்பட்ட சிவாஜி தேவ்தான் படத்தின் நாயகன். செவாலியே சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் புதல்வர். தன் தாத்தாவின் பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டுள்ளார்.

சிங்கக்குட்டி முடித்த கையோடு லண்டனில் நடிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சென்றவர், இப்போது அடுத்தடுத்து புதிய படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். நந்தனம் தன்னையும் கோடம்பாக்கத்தில் ஒரு நல்ல இடத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்கிறார் நம்பிக்கையுடன்.

காவலன் நாயகி மித்ரா குரியன் 'காவலனு'க்குப் பிறகு நடிக்கும் படம் இது.

படத்தின் முக்கிய வேடத்தில் சன் டிவியில் கையில் ஒரு கோடி நிகழ்ச்சி நடத்தும் ரிஷி நடிக்கிறார். காமடி களத்தை அயன் ஜெகன் களைகட்ட வைக்க, ஈசனுக்குப் பிறகு ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஏ. எல் அழகப்பன்.

முதல் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் உள்ள நந்தனம் மற்றும் ஹெச் சி எல் போன்ற பிரபல ஐ டி நிறுவனங்களில் அனுமதி பெற்று நடைபெற்றது. அன்வர் படத்திற்கு இசையமைத்த கோபி சுந்தர் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார். எல். மோகன் ஒளிப்பதிவு செய்ய, வி. டி. விஜயன் எடிட்டிங் செய்ய சங்கர்தாசின் தயாரிப்பு மேற்பார்வையில் நந்தனம் வேகமாக வளர்ந்து வருகிறது.

 

Post a Comment