தூத்துக்குடி,மதுரை சம்பவம் படங்களில் நடித்த ஹீரோ ஹரிகுமார் நடிப்பில் உருவாகிவரும் படம் சங்கராபுரம்.
கலாபவன் மணி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை பிரபல வில்லன் நடிகர் நம்பிராஜன் கதை-வசனம் எழுதி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மேலும் வளர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சங்கராபுரம் படத்தினை ஏஎம்ஆர் நிறுவனம் சார்பில்- ராஜேந்திரன் அண்ணாச்சியும் விஎஸ்வி நிறுவனம் சார்பில் விஜய சுகுமாரும் இணைந்து சரி பாதி முதலீடு செய்து தயாரித்து வந்தார்கள்.
ராஜேந்திரன் அண்ணாச்சி ஈசா படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அவர் தனது சொந்த சம்பாத்தியத்திலிருந்து 50 லட்சம் ரூபாயை படத்துக்கு முதலீடாகத் தந்தாராம்.
மற்றொரு பங்குதாரர் விஜய சுகுமார் தனது பங்கினைச் சரி வர முதலீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கணக்கு வழக்கும் சரியாகக் காட்டவில்லை என்கிறார்கள். விஜய சுகுமாரிடம் பணம் கொடுத்துப் பாதிக்கப்பட்டவர்கள் அலுவலத்திற்கு வந்து பணம் கேட்டுத் தொந்தரவு செய்யும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான ராஜேந்திரன் அண்ணாச்சி, முடியும் தறுவாயில் இருந்த சங்கராபுரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டார். மேலும் பிரச்சினைக்கு தீர்வு வரும்வரை சங்கராபுரம் படத்தயாரிப்பு வேலைகளில் ஈடுபடபோவதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறார்.
லேப் கடிதங்கள், ஒப்பந்தங்கள் ராஜேந்திரன் அண்ணாச்சியிடம் இருப்பதால் சங்கராபுரம் படத்தின் வேலைகள் நின்று போயுள்ளன. மொத்த யூனிட்டும் ஷாக்காகி நிற்கிறதாம்!
Post a Comment