சென்னை: ஏதாவது ஒரு சொத்தைக் காரணம் இருந்தாலும், அதை முகாந்திரமாக வைத்து ரீலீஸ் நேரத்தில் ஒரு படத்தை முடக்க முடியுமா.. அதில் ஏதாவது பப்ளிசிட்டி கிடைக்குமா என்று ஆராய்வதில் டாக்டரேட் பட்டமே கொடுக்க வேண்டும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு.
சிறிய தயாரிப்பாளர் என்பது இவர்களுக்கு ஒரு ஆயுதம். அப்படி ஒரு ஆயுதத்துடன், நாளை மறுநாள் வெளியாக உள்ள மிஷ்கினின் முகமூடி படத்துக்கு தடை கேட்டு சிலர் களமிறங்கியுள்ளனர்.
சென்னை சிட்டிசிவில் கோர்ட்டில் எம்.சசிகலா என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நான் அர்த்தநாரீஸ்வரர் என்ற சினிமா தயாரிப்பு கம்பெனியின் உரிமையாளர். முகத்திரை என்ற தலைப்பில் சினிமா தயாரிக்கும்படி கடந்த 2010-ம் ஆண்டில் முடிவு செய்து, அதை சட்டப்படி 27.8.11 அன்று பதிவு செய்தோம்.
பல லட்சம் ரூபாய் செலவில் தயாராகும் இந்த படத்தை ஆர்.எஸ்.கணேஷ் இயக்குகிறார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி பத்திரிகை மற்றும் டி.வி.களில் வந்த விளம்பரத்தில், முகமூடி என்ற பெயரில் யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சினிமாப்படம் 31-ந் தேதி வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
முகத்திரை என்ற பெயரை நாங்கள் பதிவு செய்த பிறகு அந்த பெயரை பிரதிபலிக்கும் வேறு பெயர்களை பதிவு செய்யக்கூடாது. ஆனால் முகத்திரை என்ற தலைப்பை ஒட்டிவரும் முகமூடி என்ற தலைப்பை பதிவு செய்துள்ளனர்.
முகமூடி என்ற பெயரில் சினிமா வெளியே வந்தால், மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதோடு, எங்களுக்கும் நஷ்டம் ஏற்படும். எனவே முகமூடி என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த 17-வது சிட்டிசிவில் கோர்ட்டு நீதிபதி, தென்னிந்திய தமிழ் சினிமா தயாரிப்பாளர் கில்டு, தமிழ்நாடு சினிமா தயாரிப்பாளர் கவுன்சில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.
பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள சூப்பர் ஹீரோ கதை முகமூடி. மிஷ்கின் இயக்க, யுடிவி தயாரிப்பில் ஜீவா, நரேன், பூஜா, கிரீஷ் கர்னாட் நடித்துள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது.
Post a Comment