'பாண்டி ஒலி பெருக்கி நிலையம்' - தடை நீட்டிப்பு

|

Interim Stay On Pandi Oliperukki Nilayam Extended   

சென்னை: பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படத்துக்கு எதிரான தடையை சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

சென்னை பெருநகர 8-வது உரிமையியல் நீதிமன்றத்தில் பைனான்சியர் எஸ். சிவகுமார் தாக்கல் செய்துள்ள வழக்கில், 'சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த ராசுமதுரவன் என்பவர், `பாண்டி ஒலி பெருக்கி நிலையம்' என்ற தலைப்பில் தமிழ் சினிமா படம் தயாரித்து, இயக்கி வருகிறார். இந்த படத்தை தயாரிக்க, என்னிடம் ரூ.24 லட்சம் கடன் வாங்கினார். அப்போது, படம் ரிலீசாவதற்கு 30 நாட்களுக்கு முன்பு பணத்தை திருப்பி தந்து விடுவதாக ராசுமதுரவன் கூறினார். ஆனால் பணத்தை திருப்பித்தராமல், படத்தை 17-ந் தேதி வெளியிடுவதாக விளம்பரம் செய்துள்ளார். எனவே பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலியமூர்த்தி, 'படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து' கடந்த 16-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி கலியமூர்த்தி, அதுவரை `பாண்டி ஒலி பெருக்கி நிலையம்' படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

 

Post a Comment