இயக்குநர் பாலசேகரனை நினைவிருக்கிறதா... லவ் டுடே, துள்ளித் திரிந்த காலம் என குறிப்பிடத்தக்க படங்களைக் கொடுத்தவர். மாதவன் - பாவனா நடிக்க ஆர்யா என்ற படம் கொடுத்தவர். படம் சரியாகப் போகாவிட்டாலும், அதில் இடம்பெற்ற வடிவேலு காமெடி இன்றைக்கும் பெரிய அளவில் பேசப்படுகிறது.
அதன் பிறகு தெலுங்குப் பட உலகுக்குப் போய் இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தார். நாகார்ஜூனா, பூமிகா என பெரிய நட்சத்திரங்களை இயக்கினார். இப்போது புதிய படம் தொடங்கியுள்ளார். தலைப்பு: ஒருவர் மீது இருவர் சாய்ந்து...!
பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் - ஸ்வாதியே இதிலும் ஜோடியாக நடிக்கிறார்கள். கே பாக்யராஜ், விசு போன்ற பெருந்தலைகளும் உண்டு. சிங்கம்புலி காமெடியை கவனிக்கிறார்.
பாலசேகரனின் முதல் படமான லவ்டுடேக்கு இசை தந்த அதே ஷிவாதான் இந்தப் படத்துக்கும் இசை. விஜயகோபால் ஒளிப்பதிவு செய்ய, விடி விஜயன் எடிட்டிங்கை கவனிக்கிறார்.
இந்தப் படம் இதுவரை வந்த படங்களிலேயே வித்தியாசமான காதல் படமாக இருக்கும் எனும் பாலசேகரன், சத்தமில்லாமல் 50 சதவீத படப்பிடிப்பையும் முடித்துவிட்டாராம்!
Post a Comment