சென்னை: ஏற்கெனவே தமிழ் இயக்குநர்கள் சிலர் ஹாலிவுட்டில் படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத்தை ஹாலிவுட்டுடன் இணைக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.
இயக்குநர் பிரபு சாலமன் அவருடைய நண்பர் ஜான்மேக்சுடன் இணைந்து `சாட்டை' என்ற படத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.
விழாவில், 'பெப்சி' தலைவரும், இயக்குநர்கள் சங்க செயலாளருமான அமீர் கலந்துகொண்டு பேசுகையில், "சினிமா என்பது கூட்டு முயற்சி. அதில் நிறைய பேர் உழைப்பு இருக்கிறது. இன்றைய சினிமாவில் மூத்த கலைஞர்களை இளம் கலைஞர்கள் மதிப்பதில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் மூத்த கலைஞர்களை ஒருபோதும் மறந்ததில்லை. அவர்களை மதிக்க தவறியதில்லை.
மூத்த கலைஞர்கள் அவர்கள் காலத்தில் கடந்து வந்த பாதை வேறு. இப்போது நாங்கள் கடந்து செல்லும் பாதை வேறு. நாங்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இயக்குனர்கள் சங்கம் இல்லாமல், சினிமா இல்லை. இந்தியாவிலேயே தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில்தான் முதல்முறையாக 'வெப்சைட்' தொடங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை ஹாலிவுட் இயக்குனர்கள் சங்கத்துடன் இணைக்க வேண்டும் என்று கவுதம் மேனன் பேசும்போது கேட்டுக்கொண்டார். அந்த முயற்சியில் நிச்சயமாக ஈடுபடுவோம்.
இயக்குனர்கள் சங்கத்துக்கு இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். லிங்குசாமி போன்றவர்கள் இயக்குனர்கள் சங்கத்துக்கு தலைவராக வரவேண்டும்,'' என்றார்.
விழாவில் டைரக்டர்கள் லிங்குசாமி, கவுதம் வாசுதேவ் மேனன், ஜெயம் ராஜா, ஜனநாதன், பிரபு சாலமன், சமுத்திரக்கனி, நடிகர்கள் விக்ரம் பிரபு, தம்பி ராமையா, யுவன், நடிகை மஹிமா, இசையமைப்பாளர் டி.இமான், பாடல் ஆசிரியர் யுகபாரதி, பட அதிபர் ஜான் மேக்ஸ் ஆகியோரும் பேசினார்கள்.
'சாட்டை' படத்தின் டைரக்டர் அன்பழகன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை டைரக்டர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கினார்.
Post a Comment