தனது ஜப்பான் ரசிகர்களுக்காக, சூப்பர் ஸ்டார் ரஜினி ஜப்பானிய மொழி கற்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார்.
கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துகின்றனர். அதேபோல படத்தின் சிறப்பு காட்சியையும் டிசம்பர் மாதம் அங்கு திரையிடுகிறார்கள்.
இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ரஜினியும், தீபிகா படுகோனேவும் டோக்கியோ செல்கின்றனர். படத்தின் இதர முக்கிய கலைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
தனது இந்தப் பயணத்தின்போது ஜப்பானிய ரசிகர்களையும் ரஜினி சந்தித்து பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக ரஜினி தற்போது ஜப்பான் மொழி கற்று வருகிறார். ஆசிரியரை வைத்து அந்த மொழியை கற்கிறார்.
ரஜினிக்கு ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் மராட்டி மொழிகள் தெரியும். இப்போது கூடுதலாக ஜப்பான் மொழியும் கற்கிறார்.
Post a Comment