பாலிவுட்டின் 'தந்தை' ஏ.கே.ஹங்கல் உடல் தகனம்...ஒரு 'மகனும்' வரவில்லை!

|

A K Hangal Cremation Bollywood Biggies Miss Funeral

மும்பை: பாலிவுட் நட்சத்திரங்களுக்கு தந்தையாக, தாத்தாவாக, மாமனாராக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்று, நேற்று மரணமடைந்த பழம்பெரும் நடிகர் ஏ.கே.ஹங்கலின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால் இறுதிச் சடங்கில் பாலிவுட்டைச் சேர்ந்த முன்னணிக் கலைஞர்கள் யாருமே இதில் கலந்து கொள்ளவில்லை.

அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார் நடிகர்கள், நடிகைகளுக்கு தாத்தாவாக, அப்பாவாக, மாமனாராக நடித்துப் புகழ் பெற்றவர் ஹங்கல். தனது இயல்பான, எதார்த்தமான, உருக்கமான நடிப்புக்காக பேசப்பட்டவர். முன்னணி நடிகர்களை விடவும் பிசியாக இருந்தவர், பிரபலமாக திகழ்ந்தவர். நேற்று ஹங்கல் மரணமடைந்தார்.அவருக்கு் வயது 98. அவரது இறுதிச் சடங்குகள் மும்பையில் நடந்தன.

ஹங்கலின் மகன் விஜய் தனது தந்தையின் உடலுக்கு தீமூட்டினார். இறுதிச் சடங்கில் பாலிவுட்டைச் சேர்ந்த சாதாரண நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மாறாக முன்னணி நடிகர், நடிகையர் யாருமே கலந்து கொள்ளவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரபலப் பாடகியும், நடிகையுமான இலா அருண் கூறுகையில், அத்தனை சூப்பர் ஸ்டார்களுடனும் அவர் நடித்துள்ளார். ஆனால் அதில் ஒருவர் கூட இறுதிச்சடங்குக்கு வராதது வருத்தம் தருகிறது என்றார். இறுதிச் சடங்குக்கு வந்திருந்த ஒரு சிலரில் இலாவும் ஒருவர்.

ஹங்கலுக்கு மகளாக நடித்தவர்களான ஜெயா பச்சன், ஹேமமாலினி, ரேகா, பேரனாக நடித்த சன்னி தியோல் என ஒருவருமே வராமல் போனது பாலிவுட்டில் முனுமுனுப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவைப் பொறுத்தவதரை ஓடும் குதிரைக்குத்தான் மதிப்பு. ஆனால் வெற்றிகரமாக ஓடியிருந்தாலும், ஓய்வு பெற்று விட்டால் அவ்வளவுதான்...!

 

Post a Comment