டேட்டிங் கலாச்சார விபரீதங்களைச் சொல்லும் “இது சாருவோட டேட்டிங்”!

|

movie making on dating tamilmovie ithu charuvoda dating
Close
 
மேலை நாடுகளின் மூலம் நம் நாட்டில் எவ்வளவோ சமூக - பொருளாதாரத் தாக்கங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் ஒன்றுதான் டேட்டிங் எனப்படுவது. அவர்களது நாடுகளில் வேண்டுமானால் அது இயல்பாக சகஜமாக இருக்கலாம். ஆனால் நம் நாட்டு பண்பாட்டுக் கலாச்சார சூழலுக்கு இது முற்றிலும் முரணானதாக பார்க்கப்படுகிறது.

இந்த டேட்டிங் சீர்கேடுகளை மையப்படுத்தி "இது சாருவோட டேட்டிங்" என்கிற படம் உருவாகி வருகிறது. நந்து சினி ஆர்ட்ஸ் சார்பாக இப்படத்தைத் தயாரிப்பதுடன் கதை-திரைக்கதையையும் எழுதியிருக்கிறார் திருச்சி ஜி.செல்லத்துரை.

இப்படத்தில் கதாநாயகனாக கேரளாவைச் சேர்ந்த மாடலிங் இளைஞர் கிரிஷ் அறிமுகமாகிறார். இவர் இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருப்பவர். கதாநாயகியாக ஸ்வப்னா அறிமுகமாகிறார். பெங்காலிப் பெண்ணான இவர் குஜாரத் மொழிப்படமொன்றில் நடித்திருக்கிறார்.

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி எம் குமார் நடிக்கிறார். இவர்களுடன் பாவனா ஸ்ரீ, ரேகா, சசி ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.நாகராஜன். படம் பற்றி இயக்குனர் நாகராஜன் கூறுகையில், "டேட்டிங் நம் நாட்டுக்குத் தேவையில்லாதது மட்டுமல்ல நம் கலாச்சாரத்துக்கு எதிரானது. ஆனால் இன்று படித்து விட்டு ஐடியில் பணிபுரிவர்கள் மத்தியில் இந்த டேட்டிங் ஒரு நோய் போல பரவிவிட்டது.

இந்தப் படத்தில் நாயகனும் நாயகியும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். டேட்டிங்குக்கு விருப்பமில்லாத நாயகியைச் சம்மதிக்க வைத்து வாரக் கடைசி நாளில் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்கிறான் நாயகன்.

அங்கு இருவரும் ஒரு சமூக விரோதக் கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

ஒரு நாள் காலையில் தொடங்கி மறு நாள் காலை வரையிலான 24 மணி நேரத்தில் நடக்கும் கதையாகும். எனவே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

டேட்டிங் என்பது நம் கலாச்சாரத்தில் இல்லை. எனவே நம் மொழியிலும் அதற்கான வார்த்தை இல்லை. எனவே படத்தின் தலைப்பை டேட்டிங் என்கிற அந்நிய வார்த்தையையே பயன்படுத்த வேண்டியதாயிற்று.

இன்று டேட்டிங் அதிகம் பரவி வருவதால் குற்றம் செய்பவர்களும் அதிகமாகியிருக்கிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதங்கள் ஆபத்துகள் என்ன என்பதைச் சொல்லும் இப்படம் இளைஞர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் எச்சரிக்கைப் பாடமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் எஸ் நாகராஜன்.

சென்னை, பாண்டிச்சேரி, சிதம்பரம், கடலூர் போன்ற பகுதிகளில் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருக்கிறது.

எம்.ஜெயமுரசு வின் பாடல்களுக்கு இசையமைக்கிறார் சி. ஜார்ஜ்.

 

Post a Comment