பழங்காலத்தில் சினிமா நடிகைகள் அழகாக மட்டுமல்ல அசத்தலாக நடிக்கவும் செய்வார்கள். வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, ஜமுனா, சரோஜாதேவி, பத்மினி உள்ளிட்ட பல நடிகைகள் தங்களின் அழகினாலும், அசத்தலான நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்தனர்.
அதிலும் அஞ்சலிதேவியின் அழகும் நடிப்பும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் பாங்கும் அவருக்கு என்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியது. தெய்வீக அழகு கொண்டவர் என்பதாலேயே இவருடைய அழகையும், திறமையையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களாக அமைந்தன. தேவதையாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் தேவதையாக உயர்ந்தவர்.
அழகான நடிகைகள் வயதானலும் அதே அழகோடு இருப்பது ஒரு சிலர்தான். அதில் அஞ்சலி தேவியும் ஒருவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சன்தொலைக்காட்சியில் சினிமா செய்திகள் நிகழ்ச்சியில் தன்னுடைய திரை உலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் அஞ்சலிதேவி.
இன்றைய சினிமாவை அன்றைய கால கட்ட சினிமா உடன் ஒப்பிடவே முடியாது என்று கூறினார் அஞ்சலி தேவி. அன்றைய கால கட்டத்தில் ஒரு அன்பான அணுகுமுறை இருக்கும். கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் கதைகள் அதிகம் வரும். ஆனால் இன்றைக்கு அப்படியில்லை. காலம் மாறிவிட்டது. இன்றைய காலத்திய ரசிகர்களுக்கு ஏற்ப கதையும், திரைப்படம் எடுக்கும் விதமும் மாறிவிட்டது என்று கூறினார் அஞ்சலிதேவி. அவர் சொல்லவதென்னவோ உண்மைதான்.
பேட்டியின் இடை இடையே அஞ்சலி தேவி நடித்த திரைப்படங்களில் இருந்து காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதுவும் அந்த அழைக்காதே பாடலுக்கு அஞ்சலிதேவியின் நடனம் என்றைக்கும் ரசிக்கக்கூடிய வகையில் படம்பிடிக்கப்பட்டிருந்தது. தொலைக்காட்சிகளில் புதிய திரைப்பட நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்புவதை விட இதுபோன்ற பழைய திரைப்பட நடிகைகளின் பேட்டிக்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
Post a Comment