கோன் பனேகா குரோர்பதி சீசன் 6 நிகழ்ச்சியில் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கூறி ஒரு கோடி ரூபாய் பரிசினை வென்றுள்ளார் ரயில்வே ஊழியர். வென்ற பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்வேன் என்று கூறியுள்ளார் அந்த கோடீஸ்வரர்.
சோனி டிவியில் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தி வரும், குரோர்பதி நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு உள்ளது. வெள்ளிக்கிழமையன்று ஆறாவது சீசன் போட்டி கோலாகலமாக தொடங்கியது. ஞாயிறன்று இந்தப் போட்டியில் கலந்து கொண்ட, ரயில்வே ஊழியர், மனோஜ் குமார் ரெய்னா, இறுதி வரை சரியான பதில்களை கூறி, ஒரு கோடி ரூபாய் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ரெய்னா, வடக்கு ரயில்வேயில் ஊழியராக பணியாற்றி வருகிறார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அவர், போட்டியில் ஜெயிப்பேன் என, நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அமிதாப்பின் தீவிர ரசிகனான நான், அவர் சந்தோஷமாக இருந்தால், சந்தோஷமாக இருப்பேன். அவருக்கு கஷ்டங்கள் வந்தபோது, நானும், பல முறை அழுதிருக்கிறேன் என்றார். அவரை பார்ப்பதற்காகவே, போட்டியில் கலந்து கொள்ள, 2000ம் ஆண்டு முதல், முயற்சித்து வந்தேன். போட்டிக்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளை பற்றிய, பல்வேறு செய்திகளை, தீவிரமாகப் படித்து வந்தேன். இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறேன். போட்டியில் வென்றது, மகிழ்ச்சிகரமாக உள்ளது என்றார்.
காஷ்மீரில், எனக்கு இருந்த வீட்டை, பயங்கரவாதிகள் இடித்து விட்டனர். இதனால், ஜம்மு நகருக்கு குடிபெயர்ந்தேன். பரிசுப் பணத்தை கொண்டு, எனக்கென, ஒரு வீட்டை கட்டுவேன். முடியாத ஏழைகளுக்கு உதவி செய்வேன் என்று கூறியுள்ளார் இந்த புதிய கோடீஸ்வரர்.
Post a Comment