'பாலக்காட்டு மாதவன்' ஆகிறார் விவேக்!

|

Vivek Do Bhagyaraj

சென்னை: இயக்குநர்- நடிகர் பாக்யராஜுக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்த வேடமான பாலக்காட்டு மாதவன் என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது. அதில் ஹீரோவாக நடிக்கிறார் சிரிப்பு நடிகர் விவேக். இந்தப் படம் குறித்த அறிவிப்பை பாக்யராஜ் முன்னிலையிலேயே அறிவித்தனர்.

அந்த 7 நாட்கள் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. பாக்யராஜ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி கதைக்காகவும், பாடல்களுக்காகவும், நடிப்புக்காகவும் பெரும் ஓட்டம் ஓடிய படம் அந்த 7 நாட்கள்.

அப்படத்தில் பாலக்காட்டு மாதவன் என்ற கேரக்டரில் வாழ்ந்திருப்பார் பாக்யராஜ். அந்த வேடம் இன்றளவும் மக்கள் மனதிலிருந்து அகலவில்லை.

இந்த நிலையில் அந்தப் புகழ் பெற்றவேடத்தின் பெயரில் ஒரு படத்தை உருவாக்கப் போகிறார்கள் ஏபிசி டிரீம்ஸ் என்டர்டெய்னர்ஸ் நிறுவனத்தினர். இதில் ஹீரோவாக நடிக்கிறார் சிரிப்பு நடிகர் விவேக்.

ஏபிசி நிறுவனம் செளந்தர்யா என்ற படத்தைத் தயாரித்துள்ளது. அதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் கலந்து கொண்டார். அப்போது தங்களது அடுத்த படத்தின் அறிவிப்பை இப்போது வெளியிடுவதாக அறிவித்தனர். இதையடுத்து நடிகர் விவேக் அடுத்த படத்தின் பெயர் பாலக்காட்டு மாதவன், அதில் நான் நாயகனாக நடிக்கிறேன் என்று அறிவித்தார். இதைக் கேட்டு வியப்படைந்தார் பாக்யராஜ். அடுத்து விவேக்கையும், பட நிறுவனத்தையும் வெற்றி பெற வாழ்த்துவதாக தெரிவித்தார். மேலும் இந்தப் படத்தில் விவேக்குடன் இணைந்து நடிக்க தானும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

சந்திரமோகன் இந்த பாலக்காட்டு மாதவனை இயக்கப் போகிறார். இவர் செளந்தர்யாவின் இயக்குவரும் கூட.

 

Post a Comment