எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளின் ஆரம்பம் வரை ஒரு படத்தின் விலையைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தது இளையராஜாவின் இசைதான்.
ரசிகர்களுக்கும், திரைப்பட வர்த்தகர்களுக்கும் இது பெரும் சந்தோஷத்தை அளித்தாலும், சில வயிற்றெரிச்சல் கோஷ்டிகள் மனதுக்குள் பொறாமையால் வெந்து கொண்டிருந்தனர் அன்றைக்கு. ஊடகங்களிலும்கூட இப்படியொரு கோஷ்டி இருந்தது.
இப்போது மீண்டும் அந்த பொன்வசந்தம் திரும்பியிருக்கிறது (வயிற்றெரிச்சல் பார்ட்டிகளும்தான்!). கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படமான நீதானே என் பொன்வசந்தம் படத்தின் விற்பனை விலை, இதுவரை இல்லாத அளவு பெரும் தொகையை எட்டியிருக்கிறதாம்.
இதற்கு முக்கிய காரணம், படத்தின் பாடல்கள் பெரும் ஹிட் ஆகியிருப்பது. தமிழ் சினிமா இதுவரை கண்டிராத அளவுக்கு அழகாகவும் பிரமாண்டமாகவும் படத்துக்கு பாடல் வெளியீட்டு விழா நடந்தது. லண்டன் ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து இளையராஜா நேரடியாக அந்த இசை நிகழ்ச்சியை நடத்தி அசத்தினார்.
அன்றிலிருந்து இந்தப் படத்தின் பாடல்கள் குறித்த செய்திகள் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன. பாடல் சிடிகள் விற்பனையில் சாதனைப் படைத்துள்ளன. இதுவரை தமிழ் தெலுங்கில் 2 லட்சம் சிடிக்களுக்கு மேல் விற்பனையாகியுள்ளன. இன்னொரு பக்கம், அத்தனை பண்பலை வானொலிகளிலும் படத்தின் எட்டுப் பாடல்களும் ஒலிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி, நேற்று முன்தினம் ஜெயா டிவியில் நீதானே என் பொன்வசந்தம் பட இசை வெளியீடு ஒலிபரப்பானது. படம் குறித்த எதிர்ப்பார்ப்பை ஏகத்துக்கும் கிளப்பிவிட்டுள்ளது இந்த நிகழ்ச்சி.
இதன் விளைவு, படத்தின் விற்பனை பரபரப்பாகிவிட்டது. பொதுவாக ரொமான்டிக் படங்களின் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். படம் வெளியான பிறகுதான் அதன் ஓட்டத்தைப் பொறுத்து சூடுபிடிக்கும்.
ஆனால் நீதானே என் பொன்வசந்தத்தின் ஏரியா உரிமை கடந்த இரு தினங்களாக பெரும் விலைக்குப் போய்க்கொண்டுள்ளதாம். படத்தின் கோவை ஏரியா உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது காஸ்மோ வில்லேஜ் நிறுவனம்.
எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி தரமாட்டோம் என்று கறாராகக் கூறி வந்த காஞ்சிபுரம் ஏரியா தியேட்டர்காரர்கள், படத்தை எப்படியாவது தங்கள் தியேட்டரில் வெளியிட மும்முரம் காட்டி வருகிறார்களாம். கவுதம் மேனன் இயக்கிய எந்தப் படமும் இவ்வளவு பெரிய விலைக்கு விற்கப்பட்டதில்லையாம்.
இதனால் பெரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளார் இயக்குநர் கவுதம் மேனன். இதுகுறித்து அவர் கூறுகையில், "நீதானே என் பொன்வசந்தம் இசைக்கு கிடைத்துள்ள வரவேற்பு, அதன் மூலம் படத்துக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பார்ப்பு, விற்பனை எல்லாமே எனக்கு பெரும் மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்துள்ளது. ராஜா சாருக்கு மிக்க நன்றி," என்றார்.
Post a Comment