இன்றைக்கு ஆண் பெண் நட்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவருகிறது. ஆணும் பெண்ணும் பேசினாலே கடைசியில் அது உடல்ரீதியான தொடர்பில்தான் முடியும் என்று சமூகத்தில் பலரும் பேசி வருகின்றனர். இது தொடர்பான விவாத நிகழ்ச்சி ஒன்று சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
‘உள்ளது உள்ளபடி' என்ற விவாத நிகழ்ச்சி காலை நேரத்தில் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதில் அன்னா ஹசாரேவின் அரசியல் பிரவேசம் தொடங்கி, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, ஆண் பெண் நட்பு வரை அலசப்படுகிறது. சிறப்பு அழைப்பாளர்களுடன் நேயர்களும் தொலைபேசி மூலம் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
இன்றைய 'உள்ளது உள்ளபடி' நிகழ்ச்சியில் ஆண், பெண் நட்பு குறித்த சமூகத்தின் பார்வை பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளருடன் காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர் மனநல மருத்துவர், சமூக ஆர்வலர் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.
ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான நட்பு மதிப்பிற்குரியதாக இருக்க வேண்டுமெனில் எந்த வித எதிர்பார்ப்பும் அற்றதாக விரசம் அற்றதாக இருக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர் தெரிவித்தார். யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளால்தான் இந்த சமூகம் ஆண் பெண் நட்பென்றாலே தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய நேயர்களும் ஆண், பெண் நட்பு என்பது மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு அம்சம் என்பது போலவே பேசினார்கள். அது தேவையற்றது என்றும், திருமணத்திற்கு பின்னர் சிக்கலை ஏற்படுத்தக்கூடியது என்றும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.
தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து வேலை பார்க்கும் அலுவலகம் வரை எதிர்பாலினத்தவருடன் நட்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆண் பெண் நட்பு குறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்த வேண்டும். எதையும் தடுக்க தடுக்கத்தான் அது திமிறிக்கொண்டு செல்லும். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே இதை கற்றுக்கொடுத்தால் அவர்கள் தங்களின் நட்பை தேர்ந்தெடுப்பதில் கவனமாய் இருப்பார்கள் என்றனர் சிறப்பு அழைப்பாளர்கள்.
குழந்தைகளின் நட்பு பெற்றோருக்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் கணவரின் தோழிகள் குறித்தோ, மனைவியின் நட்பு குறித்தோ கணவருக்கு தெரிந்திருப்பது அவசியம். மறைக்கும் போதுதான் சிக்கல்கள் எழும் எனவே அடிப்படை ஒழுக்கம் இருந்தால் எந்த நேரத்திலும் தடுமாற்றம் இருக்காது என்று ஆண், பெண் நட்பு குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர் சமூக ஆர்வலர்கள். இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளை பார்க்கும் போது சமூகத்தில் உள்ளவர்களின் கண்ணோட்டத்தையும், அவர்களின் கருத்துக்களையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
Post a Comment