டி.ஆர்.பிக்காக யாரையும் அழ விட மாட்டேன்: அபர்ணா

|

Aparna Pillai Turns Director

புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் நடிகையாக அறிமுகமான அபர்ணா இன்றைக்கு பிரபல தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், கேம்ஷோ ஒன்றின் கிரியேட்டிவ் ஹெட், இயக்குநராக ஆக அவதாரம் எடுத்திருக்கிறார்.

சினிமா நடிகையாக இருந்தவர்கள் சீரியலில் நாயகிகளாகத்தான் களம் இறங்குவார்கள். ஆனால் நடிகை அபர்ணா அஞ்சரைப்பெட்டி என்ற சமையல் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக சின்னத்திரையில் கால் பதித்தார். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பினை அடுத்து ஜீ தமிழில் ‘ஆயிரத்தில் ஒருவன்' என்ற வித்தியாசமான கேம்ஷோவினை இயக்கி வருகிறார். சின்னத்திரையில் வெற்றிகரமான பயணத்தை தொடங்கியுள்ள அபர்ணா தனது அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன்.

சினிமாவில் நான் நடிக்க வந்ததே விபத்துமாதிரிதான். எனக்கு ஆன் ஸ்கிரீனில் வருவதை விட இயக்கம் தொடர்பான டெக்னிக்கலான விசயங்கள்தான் பிடிக்கும். நடிப்பு, நடனத்தை தாண்டி இயக்கம்தான் எனக்கு பிடித்தமானது. அதனால்தான் திருமணம் செய்து செட்டில் ஆனா பின்னர் சின்னத்திரையில் சமையல்நிகழ்ச்சி, கேம்ஷோ என்று அடுத்த ரவுண்ட் துவக்கியிருக்கிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் கேம்ஷோ ஆடியன்சுக்கு பிடித்தமானதாக மாறிவருகிறது. என்னோட கேம்ஷோவில கலந்து கிட்டவங்களுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு பரிசு கிடைக்கணும். பார்க்கிறவங்களும் மகிழ்ச்சி அடையணும். அதுபோலதான் டிசைன் செய்திருக்கிறேன்.

ரியாலிட்டி ஷோ, கேம்ஷோவோ அதுல யாருமே அழக்கூடாது. அழுதா பிரச்சினை தீரப்போறதில்லை. நான் இந்த நிகழ்ச்சியை டிசைன் செய்யும்போதே என்னோட நிகழ்ச்சியில் யாரும் அழக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். இதையும் மீறி என் நிகழ்ச்சியில் சிலர் அழுகிறார்கள். அதன் வலி உண்மையானதாக இருந்தால் மட்டுமே நான் ஒளிபரப்பு செய்கிறேன். நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ஐ உயர்த்துவதற்காக நான் யாரையும் கட்டாயப்படுத்தி அழ வைப்பதில்லை.

கேம்ஷோவோ, சமையல் நிகழ்ச்சியோ மக்களுக்கு பிடித்தமானதாக கொடுக்கவேண்டும் என்பதே என் நோக்கம் என்று கூறிவிட்டு அடுத்த எபிசோடுக்கு தயாரானார் அபர்ணா.

 

Post a Comment