தமிழ் சேனல்களைப் பார்த்து போரடித்துப் போனவர்கள், கொஞ்சம் டிஸ்கவரி, அனிமல் பிளானட், என்ஜிசி என சேனலை திருப்பிப் பாருங்களேன். அற்புதமான, மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. டிஸ்கவரி தமிழில் இந்த வாரம் ஞாயிறு இரவு 8 மணிக்கு நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை சரித்திரம் ஒளிபரப்பாக உள்ளது.
மனிதப்பிறவி எடுக்கும் அனைவருமே சாதனையோ, சரித்திரமோ படைப்பதில்லை. சிலர் மட்டுமே சாதனை படைத்து வரலாற்றில் நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் சாதனையும் சரித்திரத்தில் இடம்பெற்று விட்ட முக்கிய நிகழ்வு என்றே கூறலாம்.
நிலவில் காலடி வைத்த நீல்ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையும் விண்வெளி ஆய்வில் அவரது கணக்கற்ற பங்களிப்புகளையும் கொண்டாடும் வகையில், டிஸ்கவரி சேனல் `ஒன் ஜெயன்ட் லீப் : எ நீல் ஆம்ஸ்ட்ராங் ட்ரிபியூட்` என்ற நிகழ்ச்சியை ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்புகிறது. ஒருமணிநேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நீல் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சியின் காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன.
நிகழ்ச்சியில் அவருடன் நிலவுக்கு பயணித்த குழு உறுப்பினர்களான ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் ஆம்ஸ்ட்ராங் உடனான நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். அப்போல்லோ -11 விண்கலத்தில் அவர்களின் பயணம் அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளிலிருந்து நிலவில் நடந்த தருணம் மற்றும் மீண்டும் பூமியில் இறங்கிய தருணம் வரை முழுமையான அந்த பரவச சாதனைப் பயணமும் இடம் பெறுகிறது.
நீல் ஆம்ஸ்ட்ராங் பிரம்மிக்கத்தக்க சாதனையை படைத்து இந்த உலகத்தில் அதற்கான அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியை அவருக்கு சமர்ப்பிப்பதாக டிஸ்கவரி சேனலில் தெற்காசிய பொது மேலாளர் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை அற்புதமான அறிவியலும் தொழில்நுட்பம் இணைந்த மகத்தான கலவை. இந்த வாழ்க்கைக் கதை இணையற்ற உணர்ச்சியைத் தருவதுடன், உலகின் சிறப்பு மிக்க வரலாற்றுத் தருணத்தின் ஒரு காட்சியையும் வருங்காலத்திற்கு உணர்த்துகிறது. ஞாயிறு இரவு 8 மணி முதல் 9 மணிவரை கண்டு டிஸ்கவரி தமிழில் அதனை ரசிக்கலாமே. இந்த சிறப்பு நிகழ்ச்சி உலகம் முழுவம் 200 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment