சென்னை: வீரப்பன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வனயுத்தம் படத்தைப் பார்த்த அவர் மனைவி முத்துலட்சுமி, ஆட்சேபனைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றார்.
போலீசுக்கு சந்தனக் கடத்தல் மன்னனாகவும், அரசியல் கட்சிககளுக்கு தமிழின உணர்வாளராகவும் காட்சி தந்த வீரப்பன், தமிழக அதிரப்படையால் சில ஆண்டுகளுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வீரப்பன் நடத்திய கடத்தல் சம்பவங்களை வைத்து ‘வனயுத்தம்' என்ற சினிமா தயாரிக்கப்பட்டது. கன்னடத்தில் ‘அட்டகாசா' என்ற பெயரில் இப்படம் ‘டப்' செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் திரைக்கதையை காவல் துறையினரிடம் காட்டி அனுமதி பெற்று படமாக்கியதால், தன் கணவரை தவறாக சித்தரித்திருப்பார்கள் என்று கூறி, இந்த படத்தை திரையிட தடை விதிக்க கோரியிருந்தார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.
படத் தயாரிப்பாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், முத்துலட்சுமி கூறுவதுபோல் ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் எதுவும் இந்த படத்தில் இடம்பெறவில்லை. ‘வனயுத்தம்' படத்தை முத்துலட்சுமிக்கு திரையிட்டுக்காட்ட நாங்கள் தயாராக உள்ளோம் என கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த படத்தை முத்துலட்சுமி பார்த்து ஆட்சேபனையை தெரிவிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். தயாரிப்பாளர் தரப்பில் சிறப்பு காட்சிக்காக ஏற்பாடும் செய்யப்பட்டது. ஆனால் முத்துலட்சுமி படத்தை பார்ப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவி ஸ்ரீதேவி ப்ரிவியூ தியேட்டரில் ‘வனயுத்தம்' சிறப்பு காட்சியை முத்துலட்சுமி பார்த்தார். தொடர்ந்து அப்படத்தின் கன்னட ரீமேக்கையும் அவர் பார்த்தார். அவருடைய வக்கீல், கோர்ட்டால் நியமிக்கப்பட்ட அட்வகேட் ஆகியோரும் அவருடன் அமர்ந்து படத்தை பார்த்தனர்.
இதையடுத்து ஆட்சேபனைக்குரிய காட்சிகளை முத்துலட்சுமி நீக்க வலியுறுத்தி உள்ளார். அவரது ஆட்சேபனை கோர்ட்டில் தெரிவிக்கப்படும். அதன் பிறகு காட்சிகள் நீக்கப்பட்டு ‘வனயுத்தம்' விரைவில் திரைக்கு வரும் என தெரிகிறது.
Post a Comment