நான் வேணுமா? விசில் வேணுமா?: உரிமையோடு அதட்டிய இளையராஜா!

|

Neethane En Pon Vasantham Cassette Release

ராஜா பாட ஆரம்பித்தாலே போதும் ரசிகர்களின் ஆரவாரத்தை கட்டுப்படுத்த முடியாது. ‘நீதானே என் பொன் வசந்தம்' பாடத்தின் பாடல் வெளியீட்டு விழா நாயகன் இளையராஜா ஆர்மோனியப் பெட்டியை வாசித்தபடி ஜனனி பாடலை பாட ஆரம்பித்த உடன் ரசிகர்கள் பக்கமிருந்து விசில் பறக்க ஆரம்பித்தது. ராஜாவால் அடுத்த அடி பாட முடியவில்லை. நீங்க விசிலடிச்சா என்னால பாட முடியாது என்று ரசிகர்களை அமைதிப்படுத்தினார். கூட்டம் அமைதி நிலைக்கு திரும்பியது. பின்னர்தான் பாடலை இயல்பாய் பாடி முடித்தார் ராஜா.

பாடல் வெளியீட்டு விழாவின் முழு பகுதியும் சிறப்பு நிகழ்சியாக ஜெயா டிவியில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பானது. திரைப்பட இயக்குநர் கவுதம் மேனன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு ராஜாவை பேட்டி கண்டு அவரின் பெர்சனல் பங்கங்களை திரும்பி பார்க்க வைத்தார்.

ராஜாவின் கையில் எப்பொழுதும் இருக்கும் ஆர்மோனியப் பெட்டியை பற்றி கேள்வி எழுப்பினார் கவுதம். அதற்கு பதிலளித்த ராஜா, "85 ரூபாய்க்கு வாங்கிய பெட்டி இது. நான் இதைத் தொட்டாலே அண்ணனிடம் பிரம்பால் அடி வாங்குவேன். பின்னர் கள்ளக்காதலியை சந்திக்கப் போகும் காதலனைப் போல இரவு நேரத்தில் ஆசையாய் இந்த ஆர்மோனிப் பெட்டியைத் தொட்டுப்பார்ப்பேன்" என்று கூறிவிட்டு சிரித்தார் ராஜா. இந்த பெட்டியை பாரதிராஜா கூட தூக்கிக் கொண்டு நடந்திருக்கிறார் என்று கூறி நண்பர்கள், சகோதரர்களுடனான இனிய நினைவுகளை அசைபோட்டார்.

கவுதம் தனக்கு பிடித்தமான பாடலை பாடச் சொல்லிக் கேட்டார். ‘பன்னீர் புஸ்பங்கள்' படத்தின் பாடலை பாடி முடித்த உடன் ரசிகர்கள் கை தட்டினர். விசில் அடிங்கப்பா என்று கவுதம் கேட்டவுடன் ரசிகர்கள் பக்கம் இருந்து விசில் பறந்தது. உடனே ராஜா, நான் சொன்னதை கடைசி வரைக்கும் காப்பாத்தணும். உங்களுக்கு விசில் வேணுமா? நான் வேணுமா? என்று செல்லமாக அதட்டினார். உடனே பதறிய கவுதம் எங்களுக்கு நீங்கதான் வேணும் என்றார். நான் எப்பவுமே இயக்குநர்கள் சொல்வதைக் கேட்க மாட்டேன். எனக்கு எது சரி என்று படுவதை நான் செய்வேன். கவுதம் மேனனிடம் அதையே பின்பற்றினேன் என்றார் ராஜா.

‘நீதானே என் பொன் வசந்தம்' படத்தின் ஒவ்வொரு பாடல்களையும் பாடகர்கள் பாடும்போது கவுதம், அதை எப்படி படமாக்கியிருப்பார் என்ற கற்பனைக்கு நம்மை அறியாமல் சென்றது.

சாய்ந்து சாய்ந்து.... பாடல் கம்போசிங் எப்படி நடந்தது, அதற்கான பாடலை எப்படி கேட்டுப் பெற்றார் கவுதம் என்று ஒளிபரப்பினார்கள். அதற்கான டியூன் உருவானதில் இருந்து யுவன் சங்கர் ராஜா பாடியது வரை உருவான விதம் வரை ஒளிபரப்பியது அற்புதமாக இருந்தது. ரெக்கார்டிங்கில் அப்பா இல்லாமல் பாடிய யுவன் அதே பாடலை மேடையில் அப்பா முன்னிலையில் பாடி அசத்தினார்.

இது வெறும் இசைவெளியீட்டு விழா நிகழ்வாக மட்டுமல்லாமல் இனிமையான நினைவுகளை அசைபோடும் நிகழ்ச்சியாகவும் அமைந்திருந்ததுதான் சிறப்பம்சம். ராஜாவின் இசையை கேட்பதற்காகவே எண்ணற்றவர்கள் குவிந்திருந்தனர். ராஜாவுடன் பணியாற்றிய பல இயக்குநர்கள் அவர்களுக்குப் பிடித்தமான பாடலை பாடச் சொல்லி செவி குளிர கேட்டு மகிழ்ந்தனர். ராஜாவைப்பற்றி அவருடன் பணியாற்றியவர்கள் தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் இரண்டரை மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலையை தாண்டி இரவு வரை நீண்டது. ராஜாவின் இசை ராஜாங்கத்தில் மயங்கியிருந்த பார்வையாளர்களுக்கு நேரம் காலம் போவது கூட தெரியுமா என்ன?

 

Post a Comment