சோனியா என்னுடன் இணைந்து நடிக்க 'கிளைமேக்ஸ்'தான் காரணம்... விவேக்

|

All Heroines Won T Agree Pair Up With Comedians Vivek

சென்னை: காமெடி நடிகருடன் ஜோடி சேர எல்லா ஹீரோயின்களும் சம்மதிக்க மாட்டார்கள் என்று விவேக் தெரிவித்துள்ளார்.

விவேக்கை நாயகனாக வைத்து ஏபிசி ட்ரீம்ஸ் என்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில் பஷீர் குருவண்ணா தயாரிக்கும் படம் பாலக்காட்டு மாதவன். சாந்தி மோகன் எழுதி இயக்கும் இப்படத்தில் சோனியா அகர்வால், செம்மீன் ஷீலா, எம்.எஸ். பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். அஜ்மல் அஜிஸ் இசையமைக்கும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடந்தது.

அந்த விழாவில் விவேக் பேசியதாவது,

என்னைப் போன்ற காமெடி நடிகர்களுடன் தே‌னி‌ குஞ்‌சா‌ரம்‌மா‌, பறவை‌ முனி‌யம்‌மா இல்லை என்றால் பல்லு போன பாட்டிகள் தான் ஜோடியாக நடிப்பார்கள். ஆனால் பாலக்காட்டு மாதவன் படத்தில் முதலில் செம்மீன் ஷீலா நடிக்கிறாங்க என்று சொன்னார்கள். சரி அவுங்க தான் நம்ம ஜோடி என்று நினைத்தேன். அடுத்து சோனியா அகர்வாலும் நடிப்பதாகக் கூறினார்கள். அவர் ஏதோ முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் என்று நினைத்தேன். கடைசியில் பார்த்தால் அவர் தான் எனக்கு ஜோடி என்று கூறினார்கள். அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அவுங்க எனக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக்கிட்டதற்கு கதை மற்றும் படத்தோட கிளைமாக்ஸ் தான் காரணம்.

பொதுவா காமெடி நடிகருடன் ஜோடி சேர எல்லா ஹீரோயின்களும் சம்மதிக்க மாட்டார்கள். இதை தப்பு என்று கூற முடியாது. திரையுலகின் டிரெண்ட் அப்படி. இவற்றையெல்லாம் தாண்டி சோனியா என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம் கதை தான் படத்தோட ஹீரோ. என்னுடன் நடிப்பதில் பெருமை என்று ஷீலா தெரிவித்தார்கள். ஆனால் அவருடன் நடிப்பதில் எனக்குத் தான் பெருமை. தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை செய்தவங்க.

இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்றால் அந்த பட்டியலில் முதலில் இருப்பவர் கே. பாக்யராஜ். அவர் நடித்த அந்த 7 நாட்கள் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் பாலக்காட்டு மாதவன். அந்த பெயரில் நடிப்பதில் எனக்கு பெருமை. அதிலும் அவரும் இப்படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மனதில் உறுதி வேண்டும் படத்தில் இருந்தே எனக்கு எம்.எஸ். பாஸ்கரை நன்கு தெரியும். அவரும், நானும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். அவரும் இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

 

Post a Comment