நடிகை அஸ்வினியின் உடலை எடுத்து்ச செல்லக் காசு கூட இல்லாத அவலம்- பார்த்திபன் உதவினார்!

|

Parthiban Helps Take Ashwini Body To Her Native Place

சென்னை: செத்தால்தான் தெரியும் அருமை என்பார்கள்... நடிகை அஸ்வினி விஷயத்தில் அது உண்மையாகி விட்டது. எத்தனையோ நடிகர்களுடன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், சினிமா நடிகை என்ற பெருமை இருந்தாலும், கடைசியில் அவரது உடலை எடுத்துச் செல்லக் கூட காசு இல்லாமல் தவித்துள்ளனர் குடும்பத்தார்.

கடைசிக்காலத்தை பெரும் கஷ்டத்துடன்தான் கழித்துள்ளார் நடிகை அஸ்வினி. அவருக்கு வந்த புற்றுநோயை விட அவர் பட்டபாடுதான் பெரும் சோகமாக இருக்கிறது.

36 வயதில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் அஸ்வினி. அவரது உடலை புற்று நோய் சீர்குலைத்துப் போட்டு விட்டது. இறுதியில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை சந்தித்தார் அஸ்வினி.

கவிஞர் புவியரசுவின் பேரன்தான் அஸ்வினியின் கணவர். வாழ்க்கை முழுவதும் வறுமையிலேயே வாடி வந்துள்ளார். இந்த செய்தி இப்போதுதான் வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளது. இவருக்கு கார்த்திக் என்ற ஒரே மகன். இவர், நடிகர் பார்த்திபனின் மகன் ராக்கி என்கிற ராதாகிருஷ்ணன் படிக்கும் அதே கல்லூரியில்தான் படித்து வருகிறார்.

பார்த்திபன்தான், அஸ்வினியை தனது பொண்டாட்டி தேவை படத்தின் மூலம் தமிழுக்குக் கூட்டி வந்தவர் என்பது நினைவிருக்கலாம். கார்த்திக் தனது தாய் படும் கஷ்டத்தையும் சிகிச்சைக்கு செலவு செய்யக்கூட வசதியில்லாத நிலையையும் ராக்கியிடம் அழுது புலம்ப, ராக்கி தனது தந்தையிடம் சொல்ல உடனே ரூ. 10,000 கொடுத்து உதவினாராம் பார்த்திபன்.

இந்த நிலையில் தற்போது அஸ்வினி இறந்த நிலையில் அவரது உடலை ஆந்திராவுக்குக் கொண்டு செல்ல பணம் இல்லாமல் தடுமாறியுள்ளது அஸ்வினியின் குடும்பம். இதையடுத்து பார்த்திபனே ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து உடலை ஆந்திராவுக்கு அனுப்பி வைத்து உதவியுள்ளாராம்.

தற்போது அனாதரவாக விடப்பட்டுள்ள கார்த்திக்கின் முழுப் படிப்புச் செலவையும் பார்த்திபனே ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment