ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!

|

Neeya Naana Program Teenage Children Vs Parents

விவாத நிகழ்ச்சிகள் சில சமயம் வித்தியாசமாக அமைவதுண்டு. அதுபோலத்தான் இந்தவாரம் ஞாயிறு இரவு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் டீன் ஏஜ் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் கருத்து மோதல்களைப் பற்றி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் சுவையானதானகவும், அனைவரையும் யோசிக்க வைக்கக் கூடியதாகவும் இருந்தது.

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைகள் குழந்தைகள் தொடங்கி இளம் வயதினர் வரை அனைவரும் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பேஸ்புக்கில் மணிக்கணக்கில் சாட்டிங் செய்யும் தங்களின் பிள்ளைகள் தங்களுடன் சில மணிநேரங்கள் பேச நேரம் ஒதுக்குவதில்லை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் மனக்குறை. அதேபோல் பெற்றோர்கள் தங்களை கண்காணித்துக் கொண்டே இருக்கின்றனர். ரிமோட் கண்ட்ரோல் போல பெற்றோர்கள் செயல்படுகின்றனர் என்பது பிள்ளைகளின் குற்றச்சாட்டு.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த இயக்குநர் கரு. பழனியப்பன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஆகியோர் இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்பட்டு வரும் உளவியல் ரீதியான சிக்கல் பற்றி அழகாக கூறினார்கள்.

இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகள் கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகளை அழகாக கூறினார் இயக்குநர் கரு. பழனியப்பன். சுஜாதாவின் பத்து சிந்தனைகள் எனப்படும் அவை அனைவரும் பின்பற்ற வேண்டியவைதான். அதில்தான் காதலுக்கு எந்த நாளை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் ஞாயிறுக்கிழமை கண்டிப்பாக காதல் வேண்டாம். அன்றைய தினம் காதலுக்கு விடுமுறை விடுங்கள் என்றார்.

தொடர்ந்து அவர், கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது... ஒன்றின் மீது கேள்வி கேட்காத நம்பிக்கை வைக்கவேண்டும். பெற்றோர்கள் செய்யும் வேலையை தட்டாமல் செய்யுங்கள் கிளாஸ் கட் அடித்துவிட்டு மேட்னி ஷோ போகாதீர்கள். ஒரு நாளைக்கு நான்கு பக்கமாவது பொதுவானதை படியுங்கள்.

தினசரி 5 ரூபாயாவது சம்பாதியுங்கள். அன்றாடம் சோற்றுக்காக அலைபவர்களைப் பற்றி ஒருமுறை சிந்தியுங்கள். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

ஒன்பது மணிக்கு மேல் வெளியில் தங்கவேண்டாம்

உறங்குவதற்குமுன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் தினசரி நடந்த நிகழ்வுகளை உரையாடுங்கள். ஆகிய சுஜாதாவின் கட்டளைகளை சொல்லி முடித்த உடன் அதனை ஆமோதிக்கும் வகையில் பெற்றோர்களும், இளம் தலைமுறையினரும் பலத்த கரவொலி எழுப்பினர்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே பெற்றோர்கள் யாரும் தங்களின் பிள்ளைகள் கெட்டுப்போகவேண்டும் என்று நினைப்பதில்லை. எனவே பெற்றோர்களின் கண்காணிப்பை கண்டு கோபம் கொள்ளாதீர்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருமே வலியுறுத்திப் பேசினார்கள்.

 

Post a Comment