மும்பை: பிரபல மலையாள நடிகை சுவேதா மேனனின் உண்மையான பிரசவ காட்சியை, களிமண்ணு என்ற திரைப்படத்திற்காக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தனது பிரசவ காட்சியை படமாக்க அனுமதித்துள்ளதாக சுவேதா ஏற்கனவே தெரிவித்திருந்தார். நேற்று மதியம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று மாலை 5.27 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
சுவேதா மேனன் ஏற்கனவே கூறியது போல, அவரது பிரசவ காட்சியை, 'களிமண்ணு' என்ற மலையாள திரைப்படத்திற்காக படப்பிடிக்க அனுமதிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற பிரசவத்தை இயக்குனர் பிளஸி படம் பிடித்தார். பிரசவத்தின் முடிவில் சுவேதா மேனன் தனது குழந்தைக்கு முத்தமிடுவதுடன் படப்பிடிப்பு முடிந்தது.
இந்தியாவிலேயே ஒரு நடிகை உண்மையிலேயே பிரவசத்தில் இருக்கும் காட்சி படப்பிடிப்பு நடத்துவது இதுவே முதல் முறையாகும். படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிபி ஜேக்கப் மற்றும் 2 உதவியாளர்கள், சுவேதா கணவர் ஸ்ரீவல்சன் ஆகியோர் பிரசவத்தின் போதும் காட்சி படமான போதும் உடனிருந்தனர்.
'களிமண்ணு' படத்தில் சுவேதா மேனன், பிஜூ மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். கர்ப்பிணியாக உள்ள போது ஒரு தாய்க்கும், சேய்க்கும் இடையிலான அன்பு எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுவதாக, 'களிமண்ணு' படத்தின் கதை அமைந்துள்ளது. இதற்காக சுவேதா மேனன் கர்ப்பம் தரித்தது முதல் பல கட்டங்களாக, படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.