தினத்தந்தி நாளிதழில் நம் தாத்தா பாட்டி காலத்தில் இருந்து கன்னித்தீவு படக்கதை வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதையும் தோற்கடிக்கும் விதமாக 2 ஆயிரமாவது எபிசோடை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது அத்திப்பூக்கள் சீரியல்.
சன் டிவியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதை என்னவோ சாதாரணமாக அண்ணி - நாத்தனார் பிரச்சினை கதைதான். ஆனால் ஜவ்விழுப்பு இழுத்து 2 ஆயிரம் எபிசோடுகளை எட்டிப்பிடிக்கப்போகிறது.
கதாநாயகி பத்மாவின் அண்ணன் மனைவி அஞ்சலி. பத்மாவின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு ஒரே வாரிசாக தனது மகன்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கும் அஞ்சலி பத்மாவின் கருவை கலைத்து அவளுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் செய்து விடுகிறாள்.
இது தெரியாமல் வாடகைத்தாய் கற்பகம் மூலம் குழந்தையை பெற்று தான் தான் அந்த குழந்தையை பெற்றெடுத்ததாக உலகிற்கு அறிமுகம் செய்கிறாள் பத்மா. இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி பத்மாவின் கணவன் மனோகருக்கும் வாடகைத்தாய் கற்பகத்திற்கும் தவறான உறவு இருப்பதாக கதை கட்டி பத்மாவை கணவனிடம் இருந்து பிரிக்கிறாள்.
ஆயிரம் எபிசோடுகளை இந்த கதையே தாண்டிவிட்டது. இப்பொழுது 2000 மாவது எபிசோடுகளை எட்டப்போகிறது. இப்பொழுதுதான் கருவை கலைக்க மருந்து கொடுத்த நாகம்மா மூலம் பத்மாவின் கரு கலைந்து போனதற்குக் காரணம் அஞ்சலிதான் என்று தெரியவந்துள்ளது. இதனை அஞ்சலியின் பி.ஏ. ரமாவிடமும் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்ட பத்மா கொலை வழக்கில் ஜெயிலுக்குள் உள்ள அஞ்சலி வெளியே வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
இந்த கதை இப்படியே நீண்டு கொண்டிருக்க இன்னும் எத்தனை எபிசோடுகளை முழுங்கப் போகிறதோ தெரியலை. மத்தியான சாப்பாடு ஒழுங்காக சாப்பிடுகிறார்களோ இல்லை. பெரும்பாலான அத்திப்பூக்கள் தவறுவதில்லையாம். இதனை கவனித்த திருடன் ஒருவன் சரியான இரண்டு மணியில் இருந்து இரண்டரை மணிக்குள் வீடுகளுக்குள் புகுந்து சிலிண்டர்களை திருடிச் சென்றதாக வேறு நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
அத்திப்பூக்கள் மதியத் தூக்கத்தை கெடுத்தது மட்டுமல்லாது வீட்டில் உள்ள சிலிண்டர்களைகளையும் திருடு போகச் செய்துள்ளது என்பது வேதனையான விசயம். இல்லத்தரசிகளே இனியாவது உஷாராக இருங்களேன்.
Post a Comment