ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ஆயிரத்தில் ஒருவன்" ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் போட்டியில் ஜெயித்த 1லட்சத்து 39 ஆயிரத்து 500 ரூபாயை பார்வையற்றவர்களின் படிப்பிற்காக வழங்கினார்.
சுப்பு பஞ்சு தொகுத்து வழங்கும் புதிய ரியாலிட்டி ஷோ ஆயிரத்தில் ஒருவன் 12 எபிசோடுகளை கடந்துள்ளது. போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் நிச்சயமாக ஏதாவது ஒரு பரிசு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே நிகழ்ச்சி தொடங்கப்பட்டு சில வாரங்களிலேயே பிரபலமடைந்தது. இந்த போட்டியில் பிரபலங்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். உன்னைப் போல் ஒருவனில் நடித்த நடிகர் கணேஷ் வெங்கட் ராமன் இந்த ஷோவில் பங்கேற்று பார்வைத் திறனில்லாத பிரபாகரன் மற்றும் தமிழ்வேலன் ஆகியோரின் எதிர்காலத்திற்காக விளையாடி ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஜெயித்துக் கொடுத்தார். இவர்கள் இருவரும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தற்போது லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இந்த பணம் தங்களின் படிப்பிற்கு பெரிதும் உதவி புரியும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதேபோல் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு எபிசோடில் சென்னையைச் சேர்ந்த மணிமாலா என்னும் போட்டியாளர் கடைசி கனவுக் கேள்விக்குச் சரியான விடையைக் கூறி ரூ.5 லட்சம் பரிசு பெற்றுள்ளார். பெருமூளை பாதிக்கப்பட்ட தனது குழந்தையின் மருத்துவச் செலவிற்காக இந்த பணம் கிடைத்துள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார்.
பார்வையாளர்களும், பங்கேற்பாளர்களும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடையச் செய்யும் அமைந்துள்ளது ஆயிரத்தில் ஒருவன் என்கின்றனர் தொலைக்காட்சி ரசிகர்கள்.
Post a Comment