கர்ணனைத் தொடர்ந்து திருவிளையாடலும் டிஜிட்டலாகிறது: விரைவில் ரிலீஸ்

|

Tiruvilaiyadal Set Digital Re Run

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த கர்ணன் படத்தைத் தொடர்ந்து திருவிளையாடல் திரைப்படமும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது.

1965ஆம் ஆண்டில் சிவாஜி, சாவித்திரி நடிப்பில் வெளியான ‘திருவிளையாடல்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது.

சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் சிவனாக சிவாஜியும், பார்வதியாக சாவித்திரியும் நடித்துள்ளனர். செண்பகபாண்டியனாக முத்துராமன், அவ்வையாராக, கே.பி.சுந்தராம்பாள், ஹேமநாத பாகவதராக டி.எஸ்.பாலையா, பானபட்டராக டி.ஆர். மகாலிங்கம் ஆகியோரும் நடித்து இருந்தனர். ஏ.பி. நாகராஜன் டைரக்டு செய்து இருந்தார். புலவர் நக்கீரன் வேடத்தில் இயக்குனர் ஏ.பி.நாகராஜனே நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் புலவர் தருமியாக வரும் நாகேஷின் நகைச்சுவை வேடம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

டிஜிட்டல் தொழில் நுட்பம்

பிரமாண்ட அரங்குகள் அமைத்து மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘திருவிளையாடல்' திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கலரையும் மெருகூட்டியுள்ளனர். விரைவில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரிலீசாக உள்ளது. கர்ணன் திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகி 100 நாட்கள் வரை வெற்றிகரமாக ஓடியது. அதேபோல் திருவிளையாடல் திரைப்படமும் சிவாஜி ரசிகர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Post a Comment