சிம்புவுடன் இணைகிறார் 'கொலவெறி' அனிருத்!

|

Anirudh Join With Simbu Manmathan 2

சென்னை: உறவினரான தனுஷுடன் சேர்ந்து கொலவெறிப் பாடலுடன் கூடிய 3 படத்தைக் கொடுத்த இசையமைப்பாளர் அனிருத் அடுத்து தனுஷின் 'நெருங்கிய' நண்பரான சிம்புவுடன் கை கோர்க்கிறார். 3 படம் மூலம் அறிமுகமான அனிருத் சிம்புவின் மன்மதன் 2 படத்தில் இசையமைக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவின் உறவுக்காரர்தான் அனிருத். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மைத்துனர் ரவி ராகவேந்தரின் மகன். ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரும் பேச்சாகப் பேசப்பட்டார் அனிருத். காரணம், அவர் போட்ட கொலவெறிப் பாடல்தான்.

அதேபோல சமீபத்தில் மேலும் பரபரப்பாக பேசப்பட்டார் அனிருத். காரணம், அவரை விட பல வயது மூத்தவரான நடிகை ஆண்ட்ரியாவுக்கு அவர் கொடுத்த கொலவெறி முத்தத்தால்.

இந்த நிலையில் அனிருத்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முதல் படத்தில் தனுஷுடன் இணைந்த அனிருத், தனது அடுத்த படத்தில் சிம்புவுடன் கை கோர்க்கிறார். சிம்பு தனக்குப் பெரும் பெயர் கொடுத்த மன்மதன் படத்தின் 2ம் பாகத்தை இயக்கப் போகிறார். இதற்கு முதலில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று பேசப்பட்டது. ஆனால் தற்போது அனிருத்தின் பெயர் அடிபடுகிறது.

இருப்பினும் சிம்பு தரப்பிலிருந்தோ அல்லது அனிருத் தரப்பிலிருந்தோ இதை உறுதிப்படுத்தி செய்தி ஏதும் இல்லை. இருந்தாலும் அனிருத் பெயரை சிம்பு டிக் அடித்திருப்பதாக கூறுகிறார்கள்.

தனுஷுக்கு கெஸ்ட் ரோல் ஏதாச்சும் உண்டா சிம்பு...?

 

Post a Comment