அன்பு போதும்... ஆயுதம் வேண்டாம்! -ஐ.நாவில் ஐஸ்வர்யா ராய்

|

Aishwarya Rai Bachchan S Speech At Un

நியூயார்க்: உலகம் சமாதானத்துடன் இருந்தால் போதும். இன்றைய சூழலில் ஆயுதம் ஏந்துவதன் விளைவை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இளைய தலைமுறைக்கு அன்பு போதும், என்று ஐநா சபை விழாவில் பேசினார் ஐஸ்வர்யா ராய்.

அமைதிக்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவாக ஐ.நா.சபையில் நடந்த விழாவில் பங்கேற்றுப் பேசினார் ஐஸ்வர்யா ராய்.

நிலையான எதிர்காலத்துக்கான நிலையான அமைதி என்ற தலைப்பில், அமெரிக்க மாணவர்கள் மத்தியில் அவர் பேசியது:

உங்களுடன் இருக்கும் போது நானும் ஒரு மாணவர் போன்று உணர்கிறேன். ஐ.நா. சபை மீது எனக்கு பெரிய அளவில் நம்பிக்கை உள்ளது. ஏனெனில் இந்த அமைப்பினால்தான் சிறந்த ஒற்றுமையான உலகத்தை படைக்க முடியும். காக்கவும் முடியும். ஒற்றுமைதான் தைரியத்தையும், சிறந்த தலைமையையும் வழங்குகிறது. சகிப்பு தன்மை சிறந்தது. அதை நான் எனது தந்தையிடம் கற்று கொண்டேன்.

`நீங்கள்', `உங்களது', `நான்' என்ற அகந்தையை கைவிட்டு நாம், நாங்கள் என்ற உணர்வுடன் வாழ வேண்டும். நமது விருப்பு, வெறுப்புகளை கைவிட்டு ஒருவர் மீது ஒருவர் அன்புகொள்ள வேண்டும். அதன் மூலம் மட்டுமே அமைதியை பெற முடியும்.

ஆயுதங்களும், போர்களும் அபாயம் மிகுந்தது. எனவே, இளைய தலை முறையினர் ஆயுதத்தை கையில் எடுப்பதை கற்பனை செய்தும் பார்க்கக்கூடாது. ஏனெனில் இது உலகத்தையும், தலைமுறையையும் அழித்து விடும். ஆகவே அன்புடன் வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவி, பாதுகாப்புடன் வாழ வேண்டும். அமைதி, சமாதானம் என்பது ஒரு வார்த்தை மட்டுமல்ல. அது உணர்வுகளின் வெளிப்பாடு," என்றாீர்.

முன்னதாக அவர் ஐநாவின் பொதுச் செயலர் பான் கி மூன், ஐ.நா. சமாதான தூதரும், நடிகருமான மைக்கேல் டக்ளஸ், இங்கிலாந்து மனித வாழ்வியல் நிபுணர் ஜானிகுடால், அமெரிக்க யூத எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான எலிவெசல், அமெரிக்க நடிகை மோனிக்காலமன் ஆகியோரை சந்தித்தார்.

இந்த விழாவில் பங்கேற்றதன் மூலம் உலக மக்களுக்கு சமாதான செய்தி வெளியிடும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஓம் ஷாந்தி என்ற ஸ்லோகத்துடன் அவர் தனது பேச்சைத் தொடங்கினார். அதே ஸ்லோகத்துடன் முடித்தார்.

 

Post a Comment