அமீரின் அடுத்த படம்.... இளையராஜாவா... 'இளைய'ராஜாவா?

|

Ameer Requests Raaja Compose His Next Flick

விஜய்யை வைத்து தான் இயக்கும் அடுத்த படமான கண்ணபிரானுக்கு இசையமைத்துத் தரவேண்டும் என இளையராஜாவைக் கேட்டுள்ளாராம் இயக்குநர் அமீர்.

தனது முதல் படமான மௌனம் பேசியதே-யிலிருந்து இசைஞானியின் இளையமகன் யுவன் சங்கர் ராஜாவின் இசையைத்தான் அமீர் பயன்படுத்தி வருகிறார்.

பருத்தி வீரனில் யுவன் இசையில் இளையராஜா பாடிய அறியாத வயசு... பாடல் மிகப் பிரபலமானது.

தனது அடுத்த படத்துக்கு எப்படியாவது இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று வெளிப்படையாக ஒரு மேடை நிகழ்ச்சியில் அமீர் கேட்டுக் கொள்ள, 'நீங்கள்லாம் ரத்தமும் அரிவாளுமா திரியறீங்களேப்பா... அது நான் சரிப்பட மாட்டேன். யுவனே போதும்..', என்றார் சிரித்தபடி ராஜா.

ஆனால் தொடர்ந்து அமீர் ராஜாவை இசையமைக்கக் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது ஆதிபகவன் படத்தை முடித்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார் அமீர். அதற்குள் விஜய்யை வைத்து அவர் இயக்கும் அடுத்த படமான கண்ணபிரான் குறித்து செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

இந்தப் படத்துக்கு இசையமைத்துத் தர வேண்டும் என அமீர் இளையராஜாவுக்ககு கோரிக்கை விடுத்துள்ளாராம். கண்ணபிரானை இசை மழையால் நனைப்பாரா அல்லது தன் வீட்டு 'இளைய'ராஜா யுவனே போதும் என்று விட்டுவிடுவாரா... பார்க்கலாம்!

இதற்கு முன் இளையராஜா இசையமைத்த விஜய் படங்களான காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ப்ரெண்ட்ஸ் ஆகியவற்றின் இசை - பாடல்கள் பெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment