நீர்குமிழியில் தொடங்கிய திரை வாழ்க்கை: பாலசந்தர்

|

K Balachandar Look Back On His Films Tirumbipaarkiren

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் செப்டம்பர் மாதம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் அனுபவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

மலரும் நினைவுகள் என்றைக்கும் இனிமையானவை. அந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ்வது அனைவருக்கும் பிடித்தமானது. அதுவும் பிரபலமானவர்களின் நினைவுகளை அவர்களின் மூலமே தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்டதுதான் திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சி. செப்டம்பர் மாதம் முழுவதும் கே. பாலசந்தர் தன்னுடைய திரை உலக வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.

மேடைநாடகங்களில் வெற்றிகரமான இயக்குநராக, கதாசிரியராக அறியப்பட்ட கே. பாலசந்தர் 1965-ம் ஆண்டு நீர்க்குமிழி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர்.

இத்திரைப்படம் மிகுந்த வெற்றிப் படமாக அனைவராலும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், புன்னகை, இரு கோடுகள், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்று முடிச்சு போன்ற தொடர் வெற்றிப்படங்களை இயக்கினார். அவர்கள், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, என பெண்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இயக்குனர் சிகரம் பெருமைக்குரியவராக போற்றப்பட்டவர் கே.பாலசந்தர். இவர் இயக்கியவை பெரும்பாலும் மனித உறவுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறும் திரைப்படங்களாக திகழ்ந்தன. அந்த அனுபவங்களையும், அதற்கான கதைக்களம் உருவான விதம் பற்றியும் பாலசந்தர் பகிர்ந்து கொண்டார்.

பழைய திரைப்படங்களை மட்டுமல்லாது இன்றைய இளைஞர்களுக்கு படிப்பினை தரக்கூடிய வகையில் எடுக்கப்பட்ட ‘வானமே எல்லை' திரைப்படம் பற்றி கூறியது சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்க்கையை வெறுத்துப்போய் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இருந்து வெளியேறிய ஐவர் ஒன்றாக சந்தித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பதும். இறுதியில் காந்தி ராமன் என்ற மாற்றுத்திறனாளியின் சாதனையை கண்டு மனம் மாறுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கிளைமேக்ஸ் என்று கூறினார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரிதா, சுஜாதா போன்ற பல முன்னணி நடிகர்-நடிகைகளை திரையுலகிற்கு அறிமுகம் செய்த பின்னணியையும் கூறினார். இவர் ஒவ்வொரு திரைப்படம் பற்றி கூறும் போதும் அதிலிருந்து சிறப்பான காட்சிகள் ஒளிபரப்பானது. நான்கு வாரமும் ஒளிபரப்பான இவருடைய வாழ்க்கை அனுபவங்கள் வரும் தலைமுறை இயக்குநர்களுக்கு நிச்சயம் ஒரு பாடமாக அமையும்.

 

Post a Comment