சென்னை: 100 ஆண்டு காணும் இந்திய சினிமாவில் சாதனைப் படைத்த கலைஞர்களை கவுரவிக்கும் விழாவில் பங்கேற்று வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
லார்ட் ஆப் தி ரிங்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களைத் தயாரித்த பேரி ஆஸ்போர்ன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ரஜினிகாந்த் வாழ்த்து
இந்திய சினிமாவில் நீண்ட கால சேவை செய்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, நேற்று இரவு நடந்தது. அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குநர்கள் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு, ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன், நடிகர்கள் மது, கிரிஷ் கர்னாட், நடிகைகள் ஷீலா, ஜெயந்தி, சுகுமாரி ஆகியோருக்கு சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினி.
இந்தி நடிகர் திலீப்குமாருக்கான விருதை கமல்ஹாசன் மும்பைக்கு நேரில் சென்று, அவரிடம் வழங்கினார்.
சாதனையாளருக்கான விருதை பெற்றுக்கொண்ட இயக்குநர் கே.பாலசந்தர் பேசுகையில், "தமிழ் சினிமாவுக்கு கடவுள் கொடுத்த பரிசு, கமல்ஹாசன்," என்றார்.