சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் சீசன் 6 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க சனாகானுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கலர்ஸ் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை சல்மான்கான் நடத்தி வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த முறை பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் நித்தியானந்தா, நுபூர் மேதா, சயாலி பகத், நவ்ஜோத் சிங் போன்றோர் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் சிலம்பாட்டம் படத்தில் நடித்த சனாகானும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்கள் ஒரு மாதம் வெளிநபர்களின் தொடர்பு எதுவும் இல்லாமல் பூட்டிய வீட்டுக்குள் வசிக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். பின்னர் கடைசிவரை தாக்குபிடிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான வீட்டை கலை இயக்குனர் சாபு சிரில் வடிவமைத்திருக்கிறார்.
சனாகான் தற்போது 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மலையாள பதிப்பில் சில்க் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து கூறிய சனாகான்,"ஒரு மாதம் பூட்டிய வீட்டுக்குள் எப்படி இருக்கப்போகிறாய் என்று என்னிடம் கேட்கிறார்கள். அதற்கு என்னை தயார் படுத்திக் கொண்டேன். 24 மணி நேரமும் ரசிகர்கள் என்னை கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்பதால், ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது உடனிருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு, மோதல் ஏற்படும் என்று கூறுகிறார்கள். இதற்கு முன் வேண்டுமானால் அப்படி நடந்திருக்கலாம். தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அனைவரும் நல்ல முறையில் பழகுபவர்களாக இருக்கின்றனர். இந்த ஷோ மூலம் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.
Post a Comment